Home One Line P1 “பினாங்குக்கு நாடு கடத்தப்பட்ட மருது சகோதரர்களின் வாரிசு”

“பினாங்குக்கு நாடு கடத்தப்பட்ட மருது சகோதரர்களின் வாரிசு”

2587
0
SHARE
Ad

செல்லியல் பார்வை | பினாங்குக்கு நாடு கடத்தப்பட்ட மருது சகோதரர்களின் வாரிசு | Banishment of Maruthu brothers’ descendant to Penang | 24 October 2020

(24 அக்டோபர் 1801-ஆம் நாள் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டனர் சுதந்திரப் போராட்ட வீரர்களான மருது பாண்டிய சகோதரர்கள். அவர்களில் இளையவரான சின்ன மருதுவின் மகனான துரைசாமி தனது 15-வது வயதில் பினாங்குக்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் நாடு கடத்தப்பட்டார். அந்த சம்பவங்கள் குறித்த “பினாங்குக்கு நாடு கடத்தப்பட்ட மருது சகோதரர்களின் வாரிசு” என்ற தலைப்பிலான செல்லியல் பார்வை காணொலியின் கட்டுரை வடிவம்)

1987-ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் கோலாகலமாக நடைபெற்றது 6-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு. அந்த மாநாட்டின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி.

#TamilSchoolmychoice

கோலாலம்பூரில் பொதுமக்கள் அரங்கொன்றில் உரையாற்றிய கலைஞர் கருணாநிதியின் உரையில் முத்தாய்ப்பாக அமைந்தது, மருது சகோதரர்கள் குறித்து அவர் வெளியிட்ட ஓர் அரிய தகவல்.

தமிழ் நாட்டில் சிவகங்கை பகுதியில் வெள்ளையரை எதிர்த்துப் போராடிய விடுதலைப் போராட்ட வீரர்கள் சின்ன மருது, பெரிய மருது எனப் பெயர்கொண்ட மருது சகோதரர்கள்.

அவர்களில் இளைய சகோதரரான சின்ன மருதுவின் மகன் துரைசாமி மலேசிய மண்ணின் பினாங்கு தீவிற்கு வெள்ளையர்களால் நாடு கடத்தப்பட்டார் என்றார் கலைஞர். அந்த துரைசாமி தன்னை நாடு கடத்திய வெல்ஷ் என்ற பெயர் கொண்ட ஆங்கிலேயத் தளபதியை பினாங்கில் சந்தித்தான் என்ற விவரத்தையும் நூல் ஒன்றில் காணப்பட்ட குறிப்போடு விவரித்தார் கருணாநிதி.

கேட்டுக் கொண்டிருந்தவர்களில் பெரும்பாலோர் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்தனர். அன்றைக்கு, அதாவது இணையத் தொடர்புகள் இல்லாத 1987-ஆம் ஆண்டில் கருணாநிதி தெரிவித்தது, கூட்டத்தில் இருந்தவர்களுக்கு புதிய தகவலாக, அதுவரை வெளிவராத தகவலாக இருந்தது.

ஆனால் இப்போது இணைய வெளி எங்கும் மருது சகோதரர்கள் குறித்தும் சின்ன மருது மகன் துரைசாமி பினாங்குக்கு நாடு கடத்தப்பட்டது குறித்தும் ஏராளமான ஆராய்ச்சிக் குறிப்புகளும், தகவல்களும் காணக் கிடைக்கின்றன.

சின்ன மருது மகன் துரைசாமி

மருது பாண்டிய சகோதரர்களில் இளையவரான சின்ன மருதுவின் மகன் துரைசாமி பினாங்கு தீவுக்கு நாடு கடத்தப்பட்டது ஏன்?

பின்னர் அவருக்கு என்ன நேர்ந்தது?

இந்த விவரங்களையெல்லாம் நாம் இந்தக் காணொலி வழி நினைவுகூர்வதற்குக் காரணம் 1801-ஆம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் தேதிதான் மருது சகோதரர்கள் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டனர் என்பதுதான்.

சில நாட்களுக்கு முன்னர் நம்மைக் கடந்து சென்ற அக்டோபர் 24-ஆம் தேதியன்று மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

தமிழ் நாட்டில் அமைந்திருக்கும் மருது பாண்டிய சகோதரர்களின் நினைவு மண்டபம்

மருது சகோதரர்கள் மட்டுமின்றி அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், படைத் தளபதிகள், ஆதரவாளர்கள் என சுமார் ஐந்நூறு பேரை ஈவு இரக்கமின்றி ஒரே நேரத்தில் தூக்கில் போட்டுக் கொன்றனர் ஆங்கில ஆட்சியாளர்கள் என வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

மருது சகோதரர்களின் வாரிசுகள் யாரும் உயிருடன் இருக்கக் கூடாது என்பதில் வெள்ளையர்கள் குறியாக இருந்தனர்.

மருது சகோதரர்களைத் தூக்கிலிட்டவர் கர்னல் வெல்ஷ் (Colonel Welsh) என்பவர். இவர் ஒரு காலகட்டத்தில் மருது சகோதரர்களோடு நெருக்கமாகப் பழகியவர். அவர்களின் நண்பராக இருந்தவர். மருது சகோதரர்கள் மான் இறைச்சியை வாட்டித் தர அதை கர்னல் வெல்ஷ் உண்டு மகிழ்ந்து பாராட்டும் அளவுக்கு அவர்களுக்குள் நெருக்கம் இருந்திருக்கிறது.

அதே மருது சகோதரர்கள் வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடியபோது அவர்களைத் தோற்கடித்து அவர்களைத் தூக்கிலிட்டவரும் அதே வெல்ஷ்தான்.

மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டபோது  சின்ன மருதுவின் மகன் துரைசாமி மட்டும் அப்போது அங்கில்லை. அதற்கான சரியான காரணமும் தெரியவில்லை.

துரைசாமியின் இயற்பெயர் முத்து வடுகநாதன். தன்னை தளபதியாக பதவி உயர்த்திய அரசர் முத்து வடுகநாத ராஜாவின் நினைவாக அந்தப் பெயரை தனது மகனுக்கு சின்ன மருது சூட்டியிருக்கிறார்.

பார்க்க அழகாக இருந்ததால் துரைசாமி மீது சின்ன மருதுவுக்கு தனிப் பாசமும் இருந்ததாம்.

மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட பின், மூன்றரை மாதங்கள் கழித்து துரைசாமி வெள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்டார்.

மருது சகோதரர்களின் வாரிசுகளையும் குடும்பத்தினரையும் தூக்கிலிட்ட வெல்ஷ் ஏன் துரைசாமியை மட்டும் தூக்கிலிடவில்லை என்பதற்கும் காரணம் தெரியவில்லை. பழைய நட்பு காரணமாக வெல்ஷ் நெஞ்சின் ஓரத்தில் கசிந்த சிறிய கருணையாகக் கூட இருந்திருக்கலாம்.

தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து பினாங்கு தீவு நோக்கி 76 நாட்கள் கப்பல் பயணம்

1802ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் நாள் 15 வயதே ஆன துரைசாமியும் மற்றும் 72 பேரும் அன்றைய பினாங்கு தீவுக்கு வெல்ஷ் தளபதியால் நாடு கடத்தப்பட்டனர். பினாங்கு, அப்போது பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவு என அழைக்கப்பட்டது.

தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து பினாங்கு தீவுக்கான அவர்களின் கப்பல் பயணம் சுமார் 76 நாட்கள் நீடித்தது. அந்தப் பயணத்தின் போது 73 பேரும் பெரிய இரும்புச் சங்கிலியால்  பிணைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் இருவர் மட்டும் இரும்புச் சங்கிலியுடன் பெரிய இரும்புக் குண்டுகளால் கணுக்காலில் பிணைக்கப்பட்டிருந்தனர்.

அந்த இருவரில் ஒருவர் துரைசாமி, இன்னொருவர் மருது சகோதரர்களின் தளபதிகளில் ஒருவரும் துரைசாமியின் மெய்க்காப்பாளருமான ஷேக் உசேன்.

துரைசாமியுடன் பினாங்குக்கு நாடு கடத்தப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் சிறைக் கொடுமைகளினால் அடுத்த 6 மாதங்களிலேயே மரணமடைந்தனர். எஞ்சியவர்கள்தான் விடுதலையாகினர் என்பதும் நமது நெஞ்சை உருக்கும் இன்னொரு செய்தி.

பினாங்கு சிறையிலிருந்து துரைசாமி கால ஓட்டத்தில் விடுதலையானார். அவருடன் விடுதலையானவர்களில் சிலர் பினாங்கிலும், சுற்றுவட்டாரத்திலும் தங்கி உள்ளூர் பெண்களையே மணந்து மலாயாவிலேயே தங்கிவிட்டனர். அவர்களின் வாரிசுகள் இன்னும் மலாயாவில் வசிக்கின்றனர்.

துரைசாமி பினாங்கு சிறையிலிருந்து விடுதலையான பின்னர் நடந்த சம்பவங்கள் சுவாரசியமானவை. அந்த சம்பவங்களைப் பார்ப்போம்.

வெல்ஷ் துரையை மீண்டும் சந்தித்த துரைசாமி

ஒரு காலகட்டத்தில் பினாங்கு மாநில கவர்னராக பதவி வகித்தவர் மேஜர் பேன்னர்மேன். வீரபாண்டியக் கட்டபொம்மன் ஆண்ட பாஞ்சாலங் குறிச்சியைக் கைப்பற்றி கட்டபொம்மனைத் தூக்கிலிட்டவர்தான் இந்த மேஜர் பேன்னர்மேன்.

மருது சகோதரர்களுக்கு முன்னரே தூக்கிலிடப்பட்டவர் கட்டபொம்மன்.

பினாங்கில் அமைந்திருக்கும் பேன்னர்மேன் கல்லறை

இன்றைய பினாங்கு தலைநகர் ஜோர்ஜ்டவுனை கட்டமைத்து உருவாக்கியவரும் இதே பேன்னர்மேன்தான். பினாங்கிலேயே மரணமடைந்த அவரின் சமாதி இன்றும் பினாங்கு ஐரோப்பிய மயானக் கொல்லையில் அமைந்திருக்கிறது.

இந்த காலகட்டத்தில் பினாங்கு மாநிலத்திற்கு வருகிறார் மருது சகோதரர்களைத் தூக்கிலிட்டு துரைசாமியை நாடு கடத்திய கர்னல் வெல்ஷ். பினாங்குக்கும் அவருக்கும் இன்னொரு தொடர்பும் உண்டு. பினாங்கு மாநிலத்தைக் கண்டுபிடித்தவரும் அதன் முதல் கவர்னருமான சர் பிரான்சிஸ் லைட் (Sir Francis Light) அவர்களின் மகளைத்தான் வெல்ஷ் திருமணம் புரிந்திருந்தார்.

வெல்ஷ் பினாங்குக்கு வருகை தந்தது தனது மாமனார் சர் பிரான்சிஸ் லைட்டின் சில சொத்து விவகாரங்களுக்காக! அந்த சமயத்தில் அப்போதைய பினாங்கு மாநில கவர்னர் வில்லியம் எட்வர்ட் பிலிப்சுக்கும், பேன்னர்மேனின் மகள் ஜேனட் பேனர்மேனுக்கும் இடையில் திருமணம் நடைபெறுகிறது.

பினாங்கில் அமைந்திருக்கும் சர் பிரான்சிஸ் லைட்டின் சிலை

பேன்னர்மேனின் மகள் திருமணத்தில் கலந்து கொள்கிறார் வெல்ஷ்.

பேன்னர்மேன் மகள்  பாஞ்சாலங்க்குறிச்சியில் பிறந்தவர் என்பது இன்னொரு சுவாரசியத் தகவல்.

இந்தத் திருமணம் நடைபெறுவது பினாங்கு பிட் ஸ்ட்ரீட்டில் (இப்போது ஜாலான் மஸ்ஜிட் காப்பிதான் கெலிங் – Jalan Masjid Kapitan Keling) அமைந்திருக்கும் செயிண்ட் ஜோர்ஜ் ஆங்கிலிக்கன் சர்ச் என்ற தேவாலயத்தில்!

நாடுகடத்தப்பட்ட சிறைக் கைதிகளைக் கொண்டு இந்த சர்ச் கட்டப்பட்டது என்றொரு தகவலும் பகிரப்பட்டிருக்கிறது. அவ்வாறு அந்த சர்ச்சின் கட்டுமானத்தில் பணியாற்றிவர்களில் சின்ன மருதுவின் மகன் துரைசாமியும் ஒருவர்.

இதே செயிண்ட் ஜோர்ஜ் தேவாலயத்தில்தான் பேன்னர்மேனின் மகள் கல்யாணம் நடைபெறுகிறது. அந்தத் திருமணம் நடைபெற்ற தேதி 30 ஜூன் 1818. இந்தத் திருமணத்தில் கலந்து கொள்ள வெல்ஷ் வந்தபோது சிறையிலிருந்து விடுதலையாகியிருந்தார் துரைசாமி.

வெல்ஷ் திருமணத்தில் கலந்து கொள்ள வந்திருக்கிறார் என்றதும் அவரைச் சந்திக்கச் செல்கிறார் துரைசாமி.

பினாங்கு செயிண்ட் ஜோர்ஜ் ஆங்கிலிக்கன் சர்ச்

துரைசாமி சந்திப்பு குறித்து கர்னல் வெல்ஷ் பதிவு

அந்த சந்திப்பு குறித்து வெல்ஷ் நேரடியாக எழுதி பதிவு செய்திருக்கிறார்.

“தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து சோகம் படிந்த முகங்களோடு துரைசாமியையையும் மற்றவர்களையும் நிரந்தரமாக அவர்களின் தாய் மண்ணில் இருந்து நாடு கடத்தும் பணியை அவர்களைக் கப்பலில் ஏற்றி செய்து முடித்தேன். ஆனால், விதிவசத்தால் பல ஆண்டுகள் கழித்து 1818-இல் மீண்டும் நான் பினாங்கில் துரைசாமியைச் சந்தித்தேன். என் கண்முன் வந்து நின்ற வயதான அந்த மனிதனைப் பார்த்ததும் நீ யார் எனக் கேட்டேன். மெல்லிய குரலில் துரைசாமி என்றான். நெஞ்சில் கூரிய கத்தி பாய்ந்தது போன்று நான் துடித்து விட்டேன். 15 வயது இளைஞனாக நான் நாடுகடத்திய எனது நண்பனான துரைசாமியை இந்தக் கோலத்தில் மீண்டும் பார்ப்பேன் என நான் நினைக்கவில்லை” என வெல்ஷ் பதிவு செய்திருக்கிறார்.

அப்போது துரைசாமி சில கடிதங்களைக் கொடுத்து சிவகங்கையில் உள்ள தனது உறவினர்களிடம் அந்தக் கடிதங்களைச் சேர்ப்பிக்க முடியுமா எனவும் வெல்ஷைக் கேட்டிருக்கிறார். ஆனால், தனது சட்டப் பிரச்சனைகள் காரணமாக அதைத் தன்னால் செய்ய முடியாது என வெல்ஷ் மறுத்துவிட்டார்.

மீண்டும் தமிழகம் திரும்புவதற்கு துரைசாமி முயற்சிகள் செய்தார் என்றாலும் அதில் அவர் தோல்வியடைந்தார் எனப் பதிவு செய்கிறார் வெல்ஷ்.

மீண்டும் தமிழகம் திரும்பினாரா துரைசாமி?

ஆனால் இன்னொரு ஆராய்ச்சிக் குறிப்பு துரைசாமி பினாங்கிலிருந்து மீண்டும் தமிழ்நாட்டுக்குத் திரும்பினார் எனத் தெரிவிக்கிறது.

1821-ஆம் ஆண்டில் துரைசாமி தமிழ்நாட்டுக்குத் திரும்பி மதுரையில் வசித்தார். பின்னர் சிவகங்கையில் காலமானர் என்றும் காளையார் கோவில் என்ற இடத்தில் தகனம் செய்யப்பட்டார் என்றும் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன.

இப்படியாக சுமார் 220 ஆண்டுகளைக் கடந்து விட்ட துரைசாமியின் வரலாற்றில் விவரிக்க முடியாத துயரங்களும், நெஞ்சை உலுக்கும் சோகங்களும் பொதிந்து கிடக்கின்றன. இன்னும் நினைவு கூரப்படுகின்றன.

நாட்டு விடுதலைக்காக தூக்கில் தொங்கி இன்னுயிர் தந்த மருது சகோதரர்களின் விடுதலைப் போராட்டம், அவர்களின் வாரிசு வழியாக நமது மலேசிய மண்ணான பினாங்குத் தீவு வரை தொடர்புப் பாலம் அமைத்திருக்கிறது என்பதும் நம்மால் என்றுமே நினைவு கூரப்பட வேண்டிய ஒன்றாகும்.

-செல்லியல் தொகுப்பு

(நன்றி : தகவல் திரட்டு உதவி : நக்கீரன்)