கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராட பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதற்கான உச்சமன்றக் குழுவின் முடிவை அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அசிஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால், கட்சி, பெர்சாத்து உடனான அதன் வேறுபாடுகளை பின்னர் தீர்த்துக் கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டார்.
நிலைமை மேம்பட்டதும், சீரானதும், அவர்களுக்கு இடையே இன்னும் தீர்க்கப்படாத பிரச்சனைகள் இருப்பதால் அம்னோ பெர்சாத்துக்கு எதிராகப் போராடும் என்று பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினரான அவர் கூறினார்.
“புதிய கூட்டணிகளை உருவாக்குவதில் மும்முரமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. தற்போதைய அரசாங்கத்துடன் கொவிட் -19 உடன் போராடுவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.
“அதன் பிறகு, நாங்கள் போராடுவோம். பெர்சாத்து தொடர்பான எங்கள் பிரச்சனை இன்னும் முடிவடையவில்லை. ஆனால், இப்போதைக்கு, நாங்கள் ஆதரிப்போம், ” என்று அவர் கூறினார்.
புதிய அரசாங்கத்தை அமைப்பதில் பிகேஆர் மற்றும் ஜசெக உடன் இணைந்து பணியாற்ற வேண்டாம் என்று அம்னோ உச்சமன்றக் கூட்டம் நேற்று இரவு முடிவு செயது. மேலும், மொகிதினின் அரசாங்கத்திற்கு அது தொடர்ந்து ஆதரவளித்து நிலமையை தணித்துள்ளது.
அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி, அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்று உச்சமன்றக் குழு ஒப்புக் கொண்டுள்ளது என்று கூறினார்.
தேசிய கூட்டணி அரசாங்கத்தின் கீழ் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் பங்களிப்பையும், எதிர்க்கட்சிகளையும் உடனடியாக அணிதிரட்டுவதன் மூலம் உடனடியாக ஒரு தேசிய நல்லிணக்க முயற்சியை செயல்படுத்த வேண்டும் என்றும் அம்னோ அழைப்பு விடுத்தது.