கோலாலம்பூர்: எம்ஏசிசி தலைமையகத்தில் அக்டோபர் 11 அன்று விடுவிக்கப்பட்ட பின்னர் காவல் துறையினரிடமிருந்து தப்பித்த நபர் இப்போது குற்றத் தடுப்புச் சட்டத்தின் (போகா) 1959-இன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
மக்காவ் மோசடி கும்பல் மற்றும் இயங்கலை சூதாட்டம் தொடர்பாக சந்தேக நபர் மீது மேலதிக விசாரணையை மேற்கொள்ள 21 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவு நவம்பர் 20 வரை அமலில் இருக்கும் என்று கோலாலம்பூர் குற்றவியல் புலனாய்வுத் துறைத் தலைவர் நிக் ரோஸ் அஜான் நிக் ஆப் ஹமிட் தெரிவித்தார்.
“இன்று காலை ஜின்ஜாங் சென்ட்ரல் தடுப்புச் சிறையில் சந்தேக நபருக்கு எதிராக தடுப்பு உத்தரவு வாசிக்கப்பட்டது,” என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.
அக்டோபர் 27- ஆம் தேதி அதிகாரிகளால் வெற்றிகரமாக மீண்டும் கைது செய்யப்பட்ட இந்த நபர், திறந்த சூதாட்ட சட்டம் 1953- இன் பிரிவு 4 (1) (சி)- இன் கீழ் விசாரணைக்கு உதவ முன்பு நேற்று வரை மூன்று நாட்கள் தடுத்து வைக்கப்பட்டார்.
அக்டோபர் 13-இல், நாட்டின் பல பிரபலங்களின் வியாபாரத்துடன் தொடர்புடைய ஒரு ‘பணமோசடி’ கும்பலில் சந்தேகநபரும் ஒருவர்.
சந்தேக நபர் சீனாவில் அங்குள்ள மக்களை குறிவைத்து மக்காவ் மோசடி நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பாளராகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அக்டோபர் 27-இல், ஒரு தங்கும் விடுதியில் பதுங்கி இருந்த நபரை அதிகாரிகள் கைது செய்தனர்.