Home One Line P2 ஷான் கானரி : ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டி உலவ விட்டவர்

ஷான் கானரி : ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டி உலவ விட்டவர்

700
0
SHARE
Ad

(கடந்த சனிக்கிழமை அக்டோபர் 31-ஆம் நாள் தனது தனது 90-வது வயதில் காலமானார் புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்ட் பட நடிகரான ஷான் கானரி. அவர் குறித்த சில நினைவுகளைப் பதிவு செய்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

ஒரு நீண்ட கால  நடிகர் பல்வேறு காரணங்களுக்காக சினிமா இரசிகர்களால் நினைவு கூரப்படுவார்.

ஷான் கானரி இன்றுவரை நினைவுகூரப்படுவது வேறு யாராலும் முறியடிக்க முடியாத சில சாதனைகளுக்காக!

#TamilSchoolmychoice

ஆங்கிலத்தில் நாவலாசிரியர் இயன் பிளமிங், ஜேம்ஸ் பாண்ட் என்ற பெயர்கொண்ட பிரிட்டிஷ் அரசாங்கத்தின் உளவாளியைக் கதாநாயகனாக வைத்து வரிசையாக சில நாவல்களை 1950-ஆம் ஆண்டுகளில் எழுதினார்.

இலட்சக்கணக்கில் அந்த நாவல்கள் விற்றுத் தீர்ந்தன.

திரைப்படத்துக்குரிய அத்தனை அம்சங்களையும் அந்த நாவல்கள் கொண்டிருந்ததால் அவற்றைத் திரைப்படமாக்க ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் முன்வந்தனர்.

அப்போது அவர்களுக்கு இருந்த மிகப்பெரிய சவால் அந்த கதாபாத்திரத்தை வெண்திரையில் உலவ விடும் ஆற்றல் நிறைந்த நடிகர் யார் என்பதுதான்!

பலரையும் பரிசீலித்த பின்னர் ஒரு புதுமுக நடிகரை அவர்கள் அடையாளம் கண்டார்கள்.

அவர்தான் ஷான் கானரி! ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்.

உடற்கட்டழகர் போட்டியில் இளவயதில் கலந்து கொண்ட ஷான் கானரி (நடுவில்)

தனது 13-வது வயதில் பள்ளியிலிருந்து பாதியிலேயே படிப்பை நிறுத்திக்கொண்டவர் அவர். பல்வேறு சிறு சிறு வேலைகளை செய்து வந்தார்.   சவப்பெட்டி சுத்தம் செய்வது, பால் விநியோகம், நீச்சல் குள பாதுகாப்பு ஊழியர் போன்றவை அவர் இளம் வயதில் பார்த்த வேலைகளின் சில!

இடையிடையே, சினிமா உலகத்தில் நுழைய முயற்சிகள் எடுத்தார்.

அழகான தோற்றமும் வலிமையான உடல் கட்டமைப்பும் கொண்ட ஷான் கானரி “மிஸ்டர் ஸ்காட்லாந்து” என்ற சிறந்த உடற்கட்டழகர் பட்டத்தையும் பெற்றிருந்தார்.

பல்வேறு சோதனைகளுக்குப் பின்னர் இறுதியாக அவரை ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்தனர்.

முதல் ஜேம்ஸ்பாண்ட் படம்

முதல் ஜேம்ஸ்பாண்ட் படமாக ‘டாக்டர் நோ’ (Dr. No), 1962-இல் ஷான் கானரியைக் கதாநாயகனாகக் கொண்டு வெளிவந்தது. மாபெரும் வெற்றி பெற்றது. அப்போது அவருக்கு வயது 32.

அதுவரையில் நாவல்களில் மட்டுமே சித்தரிக்கப்பட்டிருந்த ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தை இரத்தமும் சதையுமாக உயிரோட்டத்துடன் திரையில் உலவ விட்டார் ஷான் கானரி.

ஜேம்ஸ் பாண்ட் என்ற கதாபாத்திரம் அறிவாற்றலும் உடல் வலிமையும் கொண்டவர். எல்லா சூழ்நிலைகளிலும் சமயோசிதமாக நெருக்கடிகளிலிருந்து புத்தி கூர்மையுடன் தப்பிக்கும் 007 என்ற எண் அடையாளம் கொண்ட உளவாளி. அவரது பேச்சுகளில் கிண்டலும் கேலியும் தொனிக்கும்.

பல தொழில்நுட்ப நுணுக்கங்களும் கற்றறிந்தவர் அல்லது சொன்னவுடன் அவற்றைக் கற்றுக்கொள்ளும் மதிநுட்பம் நிறைந்தவர்.

சூதாட்டத்தில் கெட்டிக்காரர். பார்க்கும் பெண்களை எல்லாம் மயக்க வைத்து படுக்கையறையில் சாய்த்துவிடும் காதல் மன்னன். அதேசமயம் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நம்பிக்கையான விசுவாசமிக்க ஊழியன்.

இத்தனை அம்சங்களும் ஒருங்கிணைந்த கதாபாத்திரத்தை முதன்முதலாக புதிய நடிகன் ஒருவன் திரையில் தோன்றி தனது உடல் மொழியால் சித்தரித்தபோது சினிமா இரசிகர்கள் மெய்மறந்தனர். அவரைக் கொண்டாடி மகிழ்ந்தனர். பெரும் வரவேற்பை வழங்கினர்.

தொடர்ந்து ஏழு படங்களில் அதே ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார் அவர். அத்தனையும் வெற்றிப் படங்கள்.

நடிப்பாற்றலோடு கதாபாத்திரத்தை வடிவமைக்கும் திறனும் கொண்டவர்

அவருக்குப் பின்னர் இதுவரையில் 5 நடிகர்கள் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தாலும் இன்று வரையில் அவர்தான் சிறந்த ஜேம்ஸ்பாண்ட் நடிகர் என்பதுதான் பெரும்பான்மையான சினிமா இரசிகர்களின் தீர்ப்பு!

ஒரு நடிகன் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையைக் காட்டுவது வழக்கமான ஒன்று!

ஆனால் நாவல்களில் மட்டுமே படிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரத்தை அதற்குரிய அம்சங்களுடன் திரையில் காட்டுவது என்பது இன்னொரு வகையான நடிப்பாற்றல்.

அதுமட்டுமன்றி வரிசையாக அதே போன்ற கதாபாத்திரங்களில் 7 படங்களில் மக்களுக்கு போரடிக்காமல் நடித்து, அத்தனை படங்களையும் வெற்றி காணச் செய்வது என்பது இன்னொரு வகை திறமை.

அதைவிட முக்கியமாக,  தனக்குப் பிறகு ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரங்களை வெவ்வேறு காலகட்டங்களில் ஏற்ற மற்ற நடிகர்களை விட தானே சிறந்த முறையில் அந்த கதாபாத்திரத்தை பிரதிபலித்தவர் என்ற பாராட்டை தொடர்ந்து 60 ஆண்டுகளாக தக்க வைத்திருப்பது அவருக்கே உரித்தான இன்னொரு சிறப்பம்சம்.

இன்று வரையில் சுமார் 24 ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வெளிவந்திருக்கின்றன. 25-வது படமாக திரையீட்டுக்குக் காத்திருக்கிறது “நோ டைம் டு டை” என்ற தலைப்பில் டேனியல் கிரெய்க் நடித்திருக்கும் படம்.

ஷான் கானரிக்குப் பிறகு ஐந்து வெவ்வேறு நடிகர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் இத்தனை படங்களில் நடித்திருக்கின்றனர். அவர்கள் அனைவருமே ஷான் கானரி வகுத்துத் தந்த அந்த கதாபாத்திரத் தன்மையோடு அந்தப் பாத்திரத்தைக் கையாண்டதால்தான் வெற்றிகரமாக பயணப்பட முடிந்தது, என்பது சினிமா ஆய்வாளர்களின் முடிவு!

மீண்டும் ஜேம்ஸ்பாண்டாக திரும்பிய ஷான் கானரி

6 ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடித்த பின்னர் அத்தகைய படங்களில் இனி நடிக்கப் போவதில்லை என அறிவித்தார் ஷான் கானரி.

இருப்பினும் அவருக்கு இன்னொரு ஜேம்ஸ்பாண்ட் படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. 1983 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘நெவர் சே நெவர் அகேய்ன்’ (Never say Never again) என்ற படம்தான் அது!

இனிமேல் ஜேம்ஸ்பாண்டாக நடிக்க மாட்டேன் என்ற அவரது அறிவிப்பையே கிண்டல் பண்ணும் விதத்தில் அந்தப் படத்தின் தலைப்பும் பெயர் சூட்டப்பட்டது.

அந்தப் படமும் மாபெரும் வெற்றியடைந்தது.

ஆக 7 படங்களில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்த பின்னர் மற்றவகைக் கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார் ஷான் கானரி.

அதன் பின்னர்தான் அவரின் இன்னொரு கோணத்திலான நடிப்பாற்றல் வெளிப்பட்டது.

அவரது  சிறந்த நடிப்பைக் கொண்ட பல படங்கள் அதன் பின்னர்தான் வெளியே வந்தன.

“தி அண்டச்சபல்ஸ்” ( The Untouchable) என்ற படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருது 1988-இல் அவருக்கு வழங்கப்பட்டது.

இந்தியானா ஜோன்ஸ், ஹண்ட் ஃபோர் ரெட் அக்டோபர், தி ரோக் போன்ற (Indiana Jones; The Hunt For Red October;The Rock) போன்ற பல படங்கள் அவரது சிறந்த பன்முகத் தன்மை கொண்ட நடிப்பை வெளிப்படுத்தின.

ஷான் கானரி நடிப்பில் வெளிவந்த “எண்ட்ராப்மெண்ட்” (Entrapment) என்ற படத்தின் பல காட்சிகள் மலேசியாவில், தலைநகர் இரட்டைக் கோபுரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டன.

அவருக்குப் பின்னர் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் யாரும் அவர் அளவுக்கு மற்ற படங்களின் கதாபாத்திரங்களில் பிரகாசிக்க முடியவில்லை என்பது அவரது தனித்துவத்தை உணர்த்தும் மற்றொரு சிறப்பம்சம்.

1930-ஆம் ஆண்டில் பிறந்த ஷான் கானரியை, அவரது 59-வது வயதில் உலகின் மிகக் கவர்ச்சியான மனிதன் (Sexiest Man Alive) என பியூப்பிள்ஸ் மேகசின் பத்திரிக்கை தேர்ந்தெடுத்துக் கௌரவித்தது.

அவரது மகன் ஜேசன் கானரியும் ஒரு நடிகராக இப்போது உலா வந்து கொண்டிருக்கிறார்.

ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத் தன்மையை முதன் முதலாகச் செதுக்கியது –

அதற்குப் பிறகும் பன்முகக் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து பாராட்டுகளைக் குவித்தது –

போன்ற காரணங்களால் சினிமா வரலாற்றில் நிரந்தரமானதொரு இடத்தை – தடத்தைத் தனக்கென பதித்துக் கொண்டவராக ஷான் கானரி என்றுமே நினைவுகூரப்படுவார்.

-இரா.முத்தரசன்