அழகான கவர்ச்சியான பெண்கள், பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகள், கண்ணைக் கவரும் புதிய வெளிநாட்டுத் தலங்களில் படப்பிடிப்பு, நவீன இரக கார்களின் அணிவகுப்பு, வாகனங்களில் விரட்டல்கள், மோதல்கள், உளவுத் துறையின் அதி நவீன தளவாடங்களின் அறிமுகங்கள், திரைப்படத் தயாரிப்பின் தொழில் நுட்ப நுணுக்கங்கள் என அனைத்தையும் ஒருங்கே கொண்டு பல ஆண்டுகளாக வெற்றிகரமான வடிவத்துடன் வெளிவந்து கொண்டிருக்கின்றன ஜேம்ஸ்பாண்ட் படங்கள்.
ஜேம்ஸ்பாண்ட் 007 என்ற உளவுத்துறைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்கள் மாறிக் கொண்டே இருந்தாலும் அதன் மையக் கதையும், வடிவமைப்பும் மாறாமல் இதுவரையில் 24 படங்கள் வெளிவந்து விட்டன. நோ டைம் டு டை இந்த வரிசையில் 25-வது திரைப்படம்.
இயான் பிளமிங் எழுதிய நாவல்களின் அடிப்படையில் உருவானவை இந்தத் திரைப்படங்கள். இதுவரையில் கோடிக்கணக்கில் வசூல் சாதனை நிகழ்த்தியிருக்கின்றன.
ஏற்கனவே வெளிவந்திருக்க வேண்டிய படம் நோ டைம் டு டை. கொவிட்-19 பாதிப்புகள், திரையரங்குகள் மூடல் போன்ற காரணங்களால் தற்போது எதிர்வரும் நவம்பர் 2020-இல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
டேனியல் கிரெய்க் நடித்திருக்கும் ஐந்தாவது ஜேம்ஸ்பாண்ட் படம் இது. அவரது கடைசி ஜேம்ஸ்பாண்ட் படமும் இதுவே என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அந்தப் படத்தின் புதிய முன்னோட்டத்தை கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: