Home One Line P2 தொடர்பாளர்களைத் தொகுக்கும் புதிய குறுஞ்செயலி அறிமுகம்

தொடர்பாளர்களைத் தொகுக்கும் புதிய குறுஞ்செயலி அறிமுகம்

604
0
SHARE
Ad

வாஷிங்டன் : திறன்பேசிகள் (ஸ்மார்ட்போன்) நம்மை ஆக்கிரமிக்கத் தொடங்கியது முதல் நமக்கு வாய்த்த அற்புதமான ஒரு வசதி, நண்பர்களின் தொலைபேசி எண்களைத் தொகுத்து வைத்துக் கொள்வதாகும்.

முன்பெல்லாம் ஆளுக்கொரு புத்தகம் வைத்துக் கொண்டு, அதில் நண்பர்களின் தொலைபேசி எண்களை எழுதி வைத்துக் கொண்டு அலைவோம். அந்தப் புத்தகம் தொலைந்து போய்விட்டால் பெரும் மதிப்புடைய உடமை ஒன்று தொலைந்ததுபோல் கவலைப்படுவோம். அந்த தொலைபேசி எண்களை மீண்டும் சேகரிக்க அவ்வளவு சிரமப்படுவோம்.

இப்போது அதுபோன்ற பிரச்சனைகளில்லை. திறன்பேசிகளில் நூற்றுக்கணக்கான எண்களைப் பதிவு செய்து கொள்ள முடியும். அவை தொலைந்து போய்விட்டாலும், தொழில் நுட்பக் காரணமாக அழிந்து விட்டாலும், மின்னஞ்சல் மூலமாகவோ, ஐகிளவுட் போன்ற தளங்களில் ஏற்கனவே சேமித்து வைத்திருந்தால் அதிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும் நம்மால் முடியும்.

#TamilSchoolmychoice

இப்போதும் மேலும் ஒரு தொழில்நுட்ப மேம்பாடு கொண்ட புதிய குறுஞ்செயலி அறிமுகமாகவிருக்கிறது. கடந்த நவம்பர் 18-ஆம் தேதி அறிமுகம் கண்ட அந்த குறுஞ்செயிலின் பெயர் சன்ஷைன் கொண்டாக்ட்ஸ் (Sunshine Contacts).

மரிசா மேயர் – சன்ஷைன் கொண்டாக்ட்ஸ்

முன்பு யாஹூ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பணியாற்றிய மாரிசா மேயர் இந்தப் புதிய குறுஞ்செயலியோடு மீண்டும் தொழில்நுட்ப உலகில் அதிரடியாக நுழைந்துள்ளார்.

2017-இல் யாஹூவிலிருந்து விலகினார் இவர். தற்போது சன்ஷைன் கொண்டாக்ட்ஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்.

திறன்பேசி, இணையம் வழியான முகவரி தொகுப்புகள், மின்னஞ்சல் முகவரிகள் எனவேறு வேறு தளங்களில் பதிவு செய்யப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் நமது தொடர்பாளர்களின் தகவல்களை ஒரே தொகுப்பாக இந்த குறுஞ்செயலி தொகுத்து வைத்திருக்கும் என சன்ஷைன் கொண்டாக்ட்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

முதல் கட்டமாக ஆப்பிள் திறன்பேசிகளில் உள்ள தொடர்பாளர்களையும், ஜி மெயில் பயன்படுத்துபவர்களின் தகவல்களையும் இந்தக் குறுஞ்செயலி தொகுத்துத் தரும். மிக எளிதான முறையில் நமது தொடர்பாளர்களின் தகவல்களையும் இணையம் போன்ற பொதுத் தளங்களில் கிடைக்கக் கூடிய அவர்கள் குறித்த தகவல்களையும் சன்ஷைன் கொண்டாக்ட்ஸ் குறுஞ்செயலி இணைத்துத் தொகுத்துத் தரும்.

தொடர்ந்து அந்தத் தொகுப்பை மேம்படுத்திக் கொண்டே இருக்கும் வசதிகளையும் இந்த குறுஞ்செயலி கொண்டிருக்கின்றது.

சிறப்பு அழைப்பின் மூலமே தற்போதைக்கு இந்தக் குறுஞ்செயலி பதிவிறக்கம் செய்யப்படுகிறது.

கலிபோர்னியா மாநிலத்தின் தொழில்நுட்ப மையமான சிலிகோன் பள்ளத்தாக்கில் இயங்கும் சன்ஷைன் கொண்டாக்ட்ஸ் தனது புதிய குறுஞ்செயலிக்காகவும், மற்றவகை குறுஞ்செயலிகளின் உருவாக்கத்திற்கும் 20 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடாகத் திரட்டியுள்ளது.