குவாந்தான்: பகாங் மாநில சட்டமன்றத்தில் கூடுதல் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களை தேர்தல் செயல்முறைக்கு செல்லாமல் நியமிப்பதற்கும் மாநில அரசியலமைப்பை திருத்துவதற்கான தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மந்திரி பெசார் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் தாக்கல் செய்த இந்த பிரேரணையை, எதிர்க்கட்சியினர் எதிர்த்து சட்டமன்ற அமர்விலிருந்து வெளியேறினர்.
பரிந்துரைக்கப்பட்ட ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களை நியமிக்க ஏதுவாக மாநில அரசியலமைப்பின் 18- வது பிரிவு திருத்தப்பட வேண்டும் என்று முன்மொழிந்த வான் ரோஸ்டி, இந்தத் திருத்தம் அரசியல் நோக்கம் கொண்டதல்ல எனவும் மக்கள் சார்ந்ததாகும் என்றும் கூறினார்.
சட்டமன்ற உறுப்பினர்களை நியமனம் செய்வது, ஏழு சட்டமன்ற உறுப்பினர்களால் இயக்கப்பட வேண்டும் என்றும், எளிய பெரும்பான்மையால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் இந்தத் திருத்தம் கூறுகிறது.
பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்கள் விவாதங்களில் பங்கேற்கலாம் மற்றும் வாக்களிக்கும் உரிமை உண்டு, ஆனால், மந்திரி பெசாராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அல்லது மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்படத் தகுதியற்றவர்கள்.
“இந்த நியமிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பகாங்கில் உள்ள மொத்த மக்கள்தொகைக்கு ஏற்ப ஒரு சட்டமன்ற உறுப்பினரின் விகிதத்தை குறைக்க முடியும், ஏனெனில் நாங்கள் ஒரு பெரிய மாநிலம்” என்று அவர் கூறினார்.