கோலாலம்பூர்: 2021 வரவு செலவு திட்டத்தை, அதன் முடிவைப் பொருட்படுத்தாமல் எதிர்க்கட்சியினர் நேற்று எண்ணிக்கை வாக்களிப்பை நடத்தி இருக்க வேண்டும் என்று செலாங்கா நாடாளுமன்ற உறுப்பினர் பாரு பியான் தெரிவித்தார்.
இது ஒரு நியாயமற்ற வரவு செலவு திட்டம் மற்றும் எதிர்க்கட்சிகளின் குரல் அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டதாக பாரு பியான் கூறினார்.
“இந்த வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதற்கான காரணம் அடிப்படையில், இந்த திட்டம் நியாயமானதல்ல. நாம் வெற்றி பெறுகிறோமா இல்லையா என்பது வேறு விஷயம். வாக்களிப்பதன் பின்னணியில் இது மிக முக்கியமான கொள்கை,” என்று அவர் நேற்று இரவு ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
2021 வரவு செலவு திட்டம் கொள்கை அடிப்படையுல் நேற்று நிறைவேற்றப்பட்டது.
போக்கோக் செனா நாடாளுமன்ற உறுப்பினர் மாபுஸ் ஒமாரின் எண்ணிக்கை வாக்களிப்பு நடத்துவதற்கான முயற்சி தோல்வியுற்றது. 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே ஆதரித்தனர்.
பல எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை, கடைசி நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் வாக்களிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
ஜசெக நாடாளுமன்ற உறுப்பினரான அந்தோனி லோக், வரவு செலவு திட்டத்தில் ஒரு சில பகுதிகளை நம்பிக்கை கூட்டணியின் ஆதரவு இருப்பதாகக் கூறினார்.
இருப்பினும், அரசாங்கம் செய்த சமரசம் தெளிவாக இல்லை என்று பாரு பியான் கருதுகிறார்.
2021 வரவு செலவு திட்டம் நியாயமற்றது என்பதால் அதை நிராகரித்ததைத் தவிர, தேசிய கூட்டணி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு நிராகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.