கோலாலம்பூர்: துவாரன் நாடாளுமன்ற உறுப்பினர் வில்ப்ரெட் மடியஸ் தாங்காவ் சிறப்பு விவகாரங்கள் (ஜாசா) துறையை அகற்ற தீர்மானம் ஒன்றை அனுப்பியுள்ளார். ஜாசா இப்போது சமூக தொடர்புத் துறை (ஜே-கோம்) என்று பெயர் மாற்ற செய்யப்பட்டுள்ளது.
ஜாசாவுக்கு ஒதுக்கப்பட்ட 85.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு குறைக்கப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்த போதிலும் இந்த தீர்மானத்தை அவர் வழங்கியுள்ளார்.
“ஜாசா அல்லது அது வேறு பெயரில் இருந்தாலும் அதை முற்றிலுமாக இரத்து செய்ய வேண்டும் என்பதை உறுதிப்படுத்த நான் இந்த நடவடிக்கையை எடுக்கிறேன்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
அவர் நேற்று காலை மக்களவையில் இந்த தீர்மானத்தை சமர்ப்பித்தார்.
தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சகத்தின் கீழ் குழு மட்டத்தில் 2021 வரவு செலவு திட்டத்தின் போது சபாநாயகர் இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு முன்வைக்க அனுமதிப்பார் என்று அவர் நம்புவதாகத் தெரிவித்தார்.
ஜாசாவுக்கு ஒதுக்கீடு தரப்படும் என்று வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்டபோது, அது கடுமையாக விமர்சிக்கப்பட்டது, ஏனெனில் இது அடிப்படையில் அரசாங்கத்தின் பிரச்சார பிரிவாக செயல்படுகிறது.