கோலாலம்பூர் : மலேசியாவில் இயங்கும் உலகின் மிகப்பெரிய கையுறை தயாரிப்பு நிறுவனமான டாப் குளோவ் நிறுவனம் தனது தொழிலாளர்களின் குடியிருப்புகளிலும் சுகாதார நலன்களிலும் போதுமான தர நிர்ணயத்தை கடைபிடிக்காத காரணத்தால் விரைவில் நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் 5 மாநிலங்களில் இந்நிறுவனத்தின் ஆறு கையுறை தயாரிப்பு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அந்த தொழிற்சாலைகளில் அமலாக்க அதிகாரிகள் பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட போது தொழிலாளர்கள் தங்கியிருக்கும் குடியிருப்பு பகுதிகள் மிக மோசமான நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் மனிதவள இலாகா 19 விசாரணை அறிக்கைகளை திறந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்துக்கு எதிராக நீதிமன்ற வழக்கு தொடரப்படும் என அந்த இலாகா அறிவித்துள்ளது.
கோலாலம்பூர் அருகில் உள்ள டாப் குளோவ் நிறுவனம் ஒன்றில் தொழிற்சாலை வளாகத்தில் கொவிட்-19 தொற்று பரவியதையடுத்து நாடு முழுவதிலும் உள்ள டாப் குளோவ் நிறுவனத்தின் தொழிற்சாலைகளில் இந்த பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
பரிசோதனை நடத்திய அதிகாரிகள் இந்த தொழிலாளர் குடியிருப்பு பகுதிகள் நெருக்கடியானதாகவும் சுகாதாரமற்றதாகவும் போதிய காற்றோட்டம் இல்லாத நிலையிலும் இருப்பதைக் கண்டனர்.
மேலும் தொழிலாளர்கள் ஓய்வெடுக்க வசதிகள் இல்லா சூழலிலும், சமையலறை வசதிகள் இல்லாமலும் குடியிருப்புகள் இருப்பதை கண்டனர் என தீபகற்ப மலேசியாவின் மனிதவள இலாகா தலைமை இயக்குனர்அப்துல் ரகுமான் தெரிவித்தார்.
இந்நிறுவனத்தின் சில தொழிற்சாலைகள் மூடப்பட உத்தரவிடப்பட்டிருக்கின்றன.
தொழிலாளர்களை பரிசோதனைக்கு உட்படுத்தவும் நிலைமையை ஆய்வு செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
இதுவரையில் டாப் குளோவ் நிறுவனத்தின் 3,406 தொழிற்சாலை பணியாளர்கள் கொவிட்-19 பரிசோதனையில் தொற்று கண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.