கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் அஸ்மின் அலிக்கு எதிராக, அவரது தொகுதியில் 10 வாக்காளர்களால் தொடுக்கப்பட்ட வழக்குக்கு சாட்சியாக இருக்க முன்வந்துள்ளார்.
துணிச்சலான நபர்கள் என அந்த 10 நபர்களைக் கருத்தில் கொண்டு, மகாதீர் அவர்கள் கூறிய குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த நீதிமன்றம் மிகவும் பொருத்தமான இடம் என்று தெரிவித்துள்ளார்.
“நாட்டின் ஜனநாயகத்தை முதிர்ச்சியடையச் செய்வதற்கான ஒரு செயல்முறையாக அஸ்மின் போன்ற நாடாளுமன்ற உறுப்பினரின் நம்பகத்தன்மையையும் நேர்மையையும் கேள்விக்குட்படுத்தும் மக்களின் தைரியத்தை நான் காண்கிறேன். எனது சான்றுகள் தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் சாட்சியாக இருக்க நான் தயாராக இருக்கிறேன். நான் உதவ தயாராக இருக்கிறேன்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி மாதம், அஸ்மினின் ஷெரட்டன் நகர்வு மூலம், நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் வீழ்ச்சியடைந்தது. நம்பகமான கடமைகளை மீறியதாக கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியில் பதிவு செய்யப்பட்ட 10 வாக்காளர்கள் நேற்று வழக்குத் தாக்கல் செய்தனர்.
அஸ்மின் கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை 2008 முதல், பிகேஆர் கட்சியின் கீழ் வகித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினராக அஸ்மின் தனது உறுதிமொழியை மீறியதாலும், தனிப்பட்ட இலாபத்திற்காக வாக்காளர்களின் நம்பிக்கையை புறக்கணித்ததாலும், 14- வது பொதுத் தேர்தலின் பிரச்சாரத்தின் போது வாக்குறுதிகளை புறக்கணித்ததாலும் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
“நாடாளுமன்றத்தில் பேசுவதற்காக மக்கள் நம்மை தங்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்கிறார்கள் என்பதை தனிப்பட்ட பிரதிநிதிகள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் தனிப்பட்ட இலாபத்திற்காக அல்ல, ” என்று அவர் மேலும் கூறினார்.