Home One Line P1 மஇகா பதிவை சங்கப் பதிவாளர் இரத்து செய்யலாம்- கெடா மந்திரி பெசார் மிரட்டல்!

மஇகா பதிவை சங்கப் பதிவாளர் இரத்து செய்யலாம்- கெடா மந்திரி பெசார் மிரட்டல்!

813
0
SHARE
Ad

அலோர் ஸ்டார்: அண்மையில் கெடாவில் கோயில் ஒன்று இடிக்கப்பட்ட விவகாரத்தில் கெடா மஇகா தலையிடுவது பொறுப்பற்ற செயல் என்று கெடா மாநில மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நூர் கூறியுள்ளார்.

மஇகா கட்சி நாட்டின் அரசியமைப்பிற்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்றும், சட்டத்தை மீறக் கூடிய செயல்களில் சம்பந்தப்படக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

கோயில்கள் இடிக்கப்படுவது சம்பந்தமாக மஇகாவின் தலையீடு, சட்டத்தை மீறி, எழுப்பப்பட்ட கோயில்களுக்கு ஆதரவாகப் பேசுவது, அவர்கள் சட்டத்தை மீறி செயல்படுவதற்கு சமமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இந்த நடவடிக்கையால் அவர்கள் அரசியலமைப்பிற்கு எதிராக நடந்து கொள்கிறார்கள் என்ற பட்சத்தில், மஇகாவின் பதிவை சங்கப் பதிவாளர் இரத்து செய்யலாம் என்றும் மந்திரி பெசார் கூறியுள்ளார்.

ஜாலான் கோலா கெடா, தாமான் பெர்சாத்துவில் அமைந்துள்ள ஒரு கோயில் இடிக்கப்பட்டதை அடுத்து, கெடா மஇகா தொடர்புக் குழுத் தலைவர் டத்தோ எஸ்.ஆனந்தன் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்ட மஇகா இளைஞர் பொது புகார்கள் பிரிவின் தலைவர் டத்தோ சசிதரன், இக்கோயில் இடிக்கப்பட்டதற்கு அமலாக்கத் தரப்பினர் பொய் விளக்கங்களைக் கூறி உள்ளது வேதனை அளிப்பதாகத் தெரிவித்திருந்தார்.

“அலோர் ஸ்டார் ஊராட்சி மன்றத்திடம் கேட்கப்பட்ட போது, உத்தரவு மாநில மந்திரி பெசார் அலுவலகத்திலிருந்து வந்ததாகத் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட அலுவலகத்தை தொடர்புக் கொண்ட போது, கோயில் இடிக்கப்படுவதை தற்காலிகமாக நிறுத்தக் கோரி உத்தரவு வழங்கப்பட்டதாகவும், ஊராட்சி மன்றம் பிடிவாதம் பிடித்து கோயிலை இடித்துள்ளதாகக் கூறுகிறது. இது அனைவரையும் ஏமாற்றும் உக்தி. இறுதியில் இந்து மதத்தினர் பாதிக்கப்படுகின்றனர்,” என்று சசிதரன் தெரிவித்திருந்தார்.