வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் மன்றம் (House of Representatives) மரிஜுவானா அல்லது கஞ்சா என அழைக்கப்படும் போதைப்பொருளை தேசிய அளவில் சட்டபூர்வமாக அறிவிக்கும் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த சட்டம் இயற்றப்பட்டதைத் தொடர்ந்து இனி இந்த போதைப்பொருள் அனைவராலும் குறிப்பிட்ட குறைந்த அளவுக்கு பொழுதுபோக்குக்காகப் பயன்படுத்தப்படலாம். அப்படி பயன்படுத்துவது குற்றம் ஆகாது.
1970 முதல் மரிஜுவானா கட்டுப்படுத்தப்பட்ட போதை பொருளாக அமெரிக்காவில் வகைப்படுத்தப்பட்டது.
எனினும் மரிஜூவானாவை சட்டபூர்வமாக்கும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இந்த புதிய சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் மன்றத்தில் இந்த சட்டம் அங்கீகரிக்கப்பட வேண்டும். செனட்டில், குடியரசுக் கட்சியின் உறுப்பினர்களே பெரும்பான்மையில் இருக்கிறார்கள். அவர்கள் இந்த திட்டத்திற்கு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
எனவே, மரிஜுவானாவை அங்கீகரிக்கும் இந்த சட்டம் செனட் மன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டால்தான் அமுலுக்கு வர முடியும்.
ஏற்கனவே 15 அமெரிக்க மாநிலங்களும் கொலம்பிய வட்டாரமும் போதைப்பொருளை பொழுதுபோக்கு காரணங்களுக்காக பயன்படுத்த அனுமதி வழங்கியிருக்கிறது. மேலும் 30 மாநிலங்கள் மருத்துவக் காரணங்களுக்காக இந்த போதைப் பொருளை பயன்படுத்தலாம் என அனுமதி வழங்கியிருக்கின்றன.
கடந்த வாரம் நன்றி தெரிவிக்கும் வார இறுதியாக அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட போது சட்டபூர்வ போதைப் பொருள் விற்பனை மிக அதிக அளவில் விற்பனை ஆனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரையில் தேசிய அளவில் போதைப்பொருளை சட்டபூர்வமாக்கும் சட்டம் இதுவரையில் அமெரிக்காவில் கொண்டுவரப்படவில்லை. இன்னும் அதற்கானத் தடை நீடிக்கிறது.
நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் செனட் மன்றத்தில் ஜனநாயகக் கட்சிக்கு இன்னும் போதிய பெரும்பான்மை இல்லை. குடியரசு கட்சியே பெரும்பான்மையை கொண்டிருக்கிறது.
எதிர்வரும் ஜனவரி 5-ஆம் தேதி ஜோர்ஜியா மாநிலத்திற்கான இரண்டு செனட்டர் பதவிகளுக்கான தேர்தல்கள் நடைபெறுகின்றன. அந்த இரண்டு செனட்டர் பதவிகளையும் ஜனநாயகக் கட்சி கைப்பற்றினால் மட்டுமே செனட் மன்றத்தின் பெரும்பான்மை ஆதிக்கத்தை அந்தக் கட்சி பெரும் பெற முடியும்.
இந்த சட்டம் அங்கீகரிக்கப்பட்ட தன் மூலம் போதைப் பொருள் சட்டபூர்வமாக்க படுவதோடு அதன் பயன்பாடும் விற்பனையும் ஒழுங்கு படுத்தப்படும். மாநிலங்கள் எடுக்கும் முடிவுகளின் மீது மத்திய அரசாங்கம் தலையிட முடியாது.
இந்த சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டால் தேசிய அளவில் மரிஜுவானா போதைப்பொருள் காரணங்களுக்கான குற்றங்கள் இரத்து செய்யப்படும். போதைப்பொருள் தொடர்பான பொருட்கள் மீது 5 விழுக்காடு வரி விதிக்கப்படும்.
இந்த வருமானத்தைக் கொண்டு அந்த சட்டத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான உதவி நலத்திட்டங்கள் வழங்கப்படும்.