நியூயார்க் : எருதுக்குத் திண்டாட்டம், காக்கைக்குக் கொண்டாட்டம் என்பது அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் பழமொழி. அதற்கேற்ப, உலகம் முழுவதும் கொவிட்-19 தொற்றால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
அதற்கான தடுப்பூசியைத் தயாரித்திருக்கும் பிபைசர் மற்றும் மோடர்னா இணைந்த கூட்டணி நிறுவனம் உலகம் முழுவதும் இந்த மருந்தைத் தற்போது விநியோகித்து வருகிறது.
ஒவ்வொரு நாடும் வரிசையாக இந்த மருந்தை வாங்கி தங்களின் நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கத் தொடங்கியிருக்கின்றன.
ஆகக் கடைசியாக அமெரிக்காவும் அடுத்த 24 மணிநேரத்தில் அவசர கால நடவடிக்கையாக இந்தத் தடுப்பூசியை விநியோகிக்கும் என அறிவித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
2021 ஓராண்டில் மட்டும் இந்த தடுப்பூசி விற்பனையின் மூலம் பிபைசர் மற்றும் மோடர்னா நிறுவனங்கள் 32 பில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டும் என மதிப்பிடப்படுகிறது.
2020-ஆம் ஆண்டில் 975 மில்லியன் டாலர்களை தடுப்பு மருந்துகள் மூலம் பிபைசர் நிறுவனம் ஈட்டும் எனக் கணிக்கப்படுகிறது. ஆனால் இந்த வருமானம் 2021-ஆம் ஆண்டில் 19 பில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிபைசர் நிறுவனம், மற்றொரு ஜெர்மன் நிறுவனமான பையோ-என்-டெக் (BioNTech) என்ற நிறுவனத்துடன் இணைந்து கொவிட் தடுப்பூசியை உருவாக்கியிருக்கிறது. எனவே, தனது வருமானத்தை பையோ-என்-டெக் நிறுவனத்துடன் பிபைசர் பகிர்ந்து கொள்ளும்.