ஈப்போ, ஏப்ரல் 17- பிபிபி கட்சி தேசியத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.கேவியஸ் இப்பொதுத்தேர்தலில் பேரா மாநிலத்திலுள்ள பாசீர் பெடாமார் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை எனக் கூறிவந்த கேவியஸ் நாடாளுமன்றத் தொகுதியை விட்டுவிட்டு, ஒரு கட்சியின் தேசியத் தலைவராக இருந்தும் கூட பாசீர் பெடாமார் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட முன்வந்திருப்பது அரசியல் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
13ஆவது பொதுத்தேர்தலில் 1 நாடாளுமன்றத் தொகுதியிலும், 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் பிபிபி கட்சி போட்டியிடுகிறது.
கடந்த தேர்தலில் பாசீர் பெடாமார் சட்டமன்றத் தொகுதியில் ஜசெக வேட்பாளர் சியா லோங் பெங் 7,914 வாக்குகளில் வெற்றி பெற்றார். அவருக்கு 13,655 வாக்குகளும் மசீச வேட்பாளர் லி ஹெங்கிற்கு 5,747 வாக்குகளும் கிடைத்தன.
தற்போது மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 28,475ஆக உயர்வு கண்டிருக்கிறது. இவர்களில் 16.33 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள். சீன வாக்காளர்களின் எண்ணிக்கை 69.49 விழுக்காடாகவும் இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை 14.13 விழுக்காடாகவும் இருக்கிறது.