Home அரசியல் இந்தியர்களை கடுமையாக விமர்சித்த சுல்கிப்ளிக்கு தேர்தலில் வாய்ப்பா? மஇகாவும் இந்து அமைப்புகளும் கண்டனம் தெரிவிக்குமா?

இந்தியர்களை கடுமையாக விமர்சித்த சுல்கிப்ளிக்கு தேர்தலில் வாய்ப்பா? மஇகாவும் இந்து அமைப்புகளும் கண்டனம் தெரிவிக்குமா?

629
0
SHARE
Ad

nordinசுங்காய், ஏப்ரல் 17- பெர்காசா துணைத்தலைவர் டத்தோ  சுல்கிப்ளி நோர்டினை ஷாஆலாம் தொகுதிக்கு  வேட்பாளராக நியமித்திருப்பது அம்னோவில் பழமைவாத கொள்கைகள் கொண்ட குழுவினரின் கை மேலோங்கியுள்ளதைக் காட்டுகிறது.

தீவிரவாத இஸ்லாத்தை பின்பற்றுபவரான சுல்கிப்ளியை வேட்பாளராக நிறுத்துவதன் மூலம் தீவிர இஸ்லாமியர்களின் வாக்குகளை கவரும் விதமாக நேற்று, தேசியமுன்னணியின் தலைவர் நஜிப் துன் ரசாக் அவரை வேட்பாளராக அறிவித்தார்.

இந்தியர்களின் சமயத்தையும், அவர்கள் வணங்கும் தெய்வங்களையும் பகிரங்கமாக கிண்டல் செய்திருந்த சுல்கிப்ளியை வேட்பாளராக நிறுத்தியிருப்பது இந்தியர்களை புண்படுத்தியுள்ள செயலாகும்

#TamilSchoolmychoice

இந்து மதத்தை கேவலப்படுத்தி பேசிய சுல்கிப்ளி நோர்டின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடு முழுக்க இந்து அமைப்புக்களும், இந்தியர் அமைப்புக்களும் ஏன் ம.இ.கா கூட குரல் கொடுத்தது.

ஆனால் அதற்கெல்லாம் பதில் கொடுக்காத – கொஞ்சமும் அசைந்து கொடுக்காத – நஜிப்பின் தேசிய முன்னணி அரசாங்கம், இன்றைக்கு அதே சுல்கிப்ளி நோர்டினுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற மகுடம் சூட்டி அழகு பார்க்க விரும்புகின்றது.

ஒரே மலேசியா, அனைவரும் சமமே என்றெல்லாம் முழங்கிடும்  தேசிய முன்னணி சுல்கிப்ளி நோர்டினுக்கு வாய்ப்பு வழங்கியதன் வழி அது  இனவாதத்திற்கு அங்கீகாரம் வழங்கியிருப்பதாகவும் தேசிய முன்னணியின்  உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்திருப்பதாக சுங்காய் சட்டமன்ற உறுப்பினர் அ. சிவநேசன் கடுமையாகச் சாடினார்.

அண்மையக் காலமாக  சுல்கிப்ளி நோர்டினின் இனவாத அறிக்கைகள் தொடர்பில்  போலிஸ் விசாரிக்க  வேண்டி இந்து அமைப்புகளும் போலிஸ் புகார் செய்தனர். ஆனால் இதுவரை எவ்வித விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை.

மலேசியர்களிடையிலான ஒற்றுமையையும் புரிந்துணர்வையும்  சீர்குலைத்திடும்  சுல்கிப்ளிக்கும் எதிர்ப்பினை வெளிப்படுத்தி இனவாதத்திற்கு எதிராக குரல் எழுப்பிடும் அதேவேளையில் இந்து மதத்தின் தன்மையையும் இந்தியர்களின் தன்மான உணர்வுகளையும் நிலைநிறுத்திட  மஇகாவும்  இந்து அமைப்புகளும் முன் வருவார்களா? என சிவநேசன் கேள்வி எழுப்பினார்.

அதுமட்டுமில்லாது, சுல்கிப்ளி நோர்டின் மீது நடவடிக்கை எடுக்காவிடில் இந்தியர்களின் வாக்குகளை தேசிய முன்னணிக்கு எதிர்ப்பாக திருப்புவேன் என கூறிய வேள்பாரி அதனை செய்வாரா? என மேலும் கேட்டார். ஷா ஆலம் தொகுதியில் உள்ள மானமுள்ள இந்துக்கள் சுல்கிப்ளியை ஆதரித்து வாக்களிக்க கூடாது என வலியுறுத்தினார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு தேர்தலில் பாஸ் கட்சியின் சார்பாகப் போட்டியிட்ட காலிட் அப்துல் சாமாட், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தேசிய முன்னணி வேட்பாளரான அப்துல் அஜீஸ் சம்சுதீனை விட 9,314 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். மலேசியாவில் வாழும் அனைத்து இந்திய மக்களின் வெறுப்பிற்கும் ஆளாகியிருக்கும் சுல்கிப்ளியை தனது வேட்பாளராக தேசிய முன்னணி அறிவித்திருக்கும் நிலையில், அதன் தாக்கம் நிச்சயம் தேர்தலில் நாடு முழுக்க பிரதிபலிக்கும்.

அத்தொகுதியில் மஇகா, ஐபிஎப், பிபிபி, மஇஐக போன்ற கட்சிகள் இருந்தால் சுல்கிப்ளியை ஆதரிக்கக் கூடாது. ஒருவேளை ஆதரித்து செயல்பட்டால்  சம்பந்தப்பட்ட கட்சியினர் இந்து மத துரோகிகள் என அவர் வன்மையாகச் சாடினார்.