Home அரசியல் தெலுக் கெமாங்கில் மஇகாவுக்கு கடும் எதிர்ப்பு!

தெலுக் கெமாங்கில் மஇகாவுக்கு கடும் எதிர்ப்பு!

776
0
SHARE
Ad

dato-sothinathanபோர்டிக்சன், ஏப்ரல் 17- தெலுக் கெமாங் நாடாளுமன்ற தொகுதிக்கு டத்தோ எஸ்.சோதிநாதன் இல்லை என்ற செய்தி, தீ போல்  பரவிய வேளையில் புக்கிட் பெலாண்டோக் சுவா சட்டமன்ற தொகுதியில் தேசிய முன்னணி அலுவலகம் உடனடியாக மூடப்பட்டது.

தேசிய முன்னணியின் சுவா சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளராக கடந்த நான்காண்டுகளாக பணியாற்றிவந்த இட் லீகோக்கிற்கு பதிலாக டத்தோ கிங் வேட்பாளர் என மாநில மந்திரி பெசாரால் நேற்று காலை அறிவிக்கப்பட்டது.

அதே வேளையில், சுவா சட்ட மன்ற தொகுதியில் சீனர்களால் மிகவும் மதிக்கப்படும் டத்தோ சோதிநாதனுக்கு  பதில் டத்தோ வி.எஸ். மோகன் பெயரும் அறிவிக்கப்பட்டவுடன் உடனடியாக தெலுக் கெமாங் நாடாளுமன்றத்திற்குட்பட்ட பல இடங்களில் தேசிய முன்னணி நடவடிக்கை அறைகள் மற்றும்  அலுவலகங்கள் மூடப்பட்டன.

#TamilSchoolmychoice

தெலுக் கெமாங் நாடாளுமன்ற தொகுதியில் அமைந்துள்ள வாக்களிப்பு மையங்களில், செங்காங் பிடிஎம் தலைவர் அர்விந்தன், பிரட்வால் பிடிஎம் தலைவர் அன்னமுத்து, சிலியாவ் பிடிஎம் தலைவர் ராஜூ, அதர்ட்டன் பிடிஎம் தலைவர் வரதராஜூ ஆகிய நால்வர் மட்டுமே இருந்து வருகின்றனர் என பத்திரிக்கைத் தகவல்கள் தெரிவித்தன.

கெஅடிலான் சார்பாக கடந்த ஐந்தாண்டு காலம் கமாருல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நேரத்தில், இடைவிடாது தெலுக் கெமாங் தொகுதி முழுவதும்  முழுநேரமாக டத்தோ சோதிநாதன் சேவையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், டத்தோ சோதிநாதனுக்கு தனிப்பட்ட வகையில் பல விசுவாசிகளும் ஆதரவாளர்களும் எதுவும்  செய்ய முடியாத நிலையில் இருப்பதாக தாமான் ஜிம்மா ஜெயா சைட்சீ குடியிருப்பாளர் சங்கத் தலைவர் கோவிந்தசாமி ராஜூ கூறினார்.

தெலுக் கெமாங் நாடாளுமன்ற தொகுதியைப் பொறுத்தவரை, அங்குள்ள வாக்காளர்கள் அனைவரையும் தேசிய முன்னணி ஆதரவாளர்களாக மாற்ற டத்தோ சோதிநாதன் பெரும் பங்காற்றினார். ஆனால் தேசிய முன்னணி அவருக்கு வாய்ப்பளிக்காமல் புறக்கணித்துவிட்டது.

இருப்பினும்,  தெலுக் கெமாங் நாடாளுமன்றத்திற்குட்பட்ட போர்ட்டிக்சன், லுக்குட்,சுவா, பாகான் பினாங், லிங்கி ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் தேசிய முன்னணி சார்பில் போதிய அறிமுகமில்லாத வேட்பாளர்களே போட்டியிடுவதால், சோதிநாதன் ஆதரவு இல்லாமல் அவர்கள் வெல்வது கடினம் என்று கூறப்படுகின்றது.

எனவே, சோதிநாதனுக்கு தொகுதி வழங்காத காரணத்தால் ஏற்பட்டுள்ள அதிருப்தி அலைகளினால் மக்கள் கூட்டணி எளிதில் தெலுக் கெமாங் நாடாளுமன்றத்தையும் அதன் கீழ் உள்ள சில சட்டமன்ற தொகுதிகளையும் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.