சிங்கப்பூர், ஏப்ரல் 17 – சிங்கப்பூரில் வரும் ஜூன் மாதம் 24 ஆம் தேதியிலிருந்து காலை 7.45 மணிக்கு முன்பு, இரயில் சேவையைப் பயன்படுத்தும் பயணிகள், இலவசமாகப் பயணம் செய்யலாம் என்ற புதிய திட்டத்தை அந்நாட்டு அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதே சமயத்தில், காலை 7.45 மணிக்கு மேல் தொடங்கி, காலை 8.00 மணி வரைக்கும் உள்ள இடைபட்ட நேரத்தில் இரயிலில் பயணம் செய்வோருக்கு, அவர்களின் பயணக் கட்டணத்தில் 50 காசு சலுகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நேரத்தில் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக, சிங்கப்பூர் அரசாங்கம் முதற்கட்டமாக இந்த இலவசப் பயணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
சிட்டி ஹால், ராபிள்ஸ் பிளேஸ், கிளார்க் கீ, பூகிஸ், சைனா டவுன், டோபிகாட், லெவண்டர், ஆர்ச்சர்ட், ஊட்ரம் பார்க், சாமர்செட், தஞ்சோங் பகார், பேஃபிரண்ட், பிராஸ் பசா, எஸ்பிளனேட், மெரினா பே, பிராமினட் ஆகிய எம்ஆர்டி நிலையங்களில் இந்த இலவசப் பயணத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.
மலேசியாவில் ஜோகூர் மாநிலத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், அதிகாலையில் சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்கின்றனர். எனவே அவர்களுக்கு இந்த இலவசப் பயணத் திட்டம் மிகவும் பயனளிக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.