Home One Line P2 எண்ணெய் வளத்தால் கோடிகளைக் குவித்த அறவாரியம், எண்ணெய் முதலீடுகளை நிறுத்தும்

எண்ணெய் வளத்தால் கோடிகளைக் குவித்த அறவாரியம், எண்ணெய் முதலீடுகளை நிறுத்தும்

556
0
SHARE
Ad
ஜான் டி.ராக்பெல்லர்

வாஷிங்டன் : அமெரிக்காவில் பல நிறுவனங்கள் அமெரிக்காவின் எண்ணெய் வளத்தாலும் மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் வளத்தைப் பயன்படுத்தியதாலும் ஒரு காலத்தில் கோடிகளைக் குவித்தன. பல பெரும் பணக்காரர்கள் உருவாகினர்.

அத்தகையோரில் ஒருவர் ஜோன் டி.ராக்பெல்லர் (John D. Rockefeller). கடந்த நூற்றாண்டில் பெட்ரோலிய எண்ணெய் தொழிலில் ஈடுபட்டு சேர்த்த பணத்தைக் கொண்டு ராக்பெல்லர் அறவாரியம் (பவுண்டேஷன்) என்ற அமைப்பை உருவாக்கினார் இவர்.

இன்றைக்கு இந்த அறவாரியத்தின் மதிப்பு சுமார் 5 பில்லியன் அமெரிக்க டாலர். பல்வேறு நற்பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

#TamilSchoolmychoice

எனினும் இனி எண்ணெய் மூலம் தாங்கள் பெருக்கிய அறவாரியச் செல்வத்தை எண்ணெய் தொடர்பான நிறுவனங்களில் முதலீடு செய்ய மாட்டோம் என்று  ராக்பெல்லர் அறவாரியம் அறிவித்திருக்கிறது.

“பூமியிலிருந்து எண்ணெய் எடுக்கும் எந்தவிதமான தொழிலிலும் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களில் இனி முதலீடு செய்ய மாட்டோம். இதன் மூலம் சுற்றுச் சூழல் மாசுபடுவதற்கு துணை போக மாட்டோம். உலகின் பருவநிலை மாற்றம் மோசமடைவதற்குக் காரணமாக இருக்கமாட்டோம்” என அறிவித்திருக்கிறார் ராக்பெல்லர் அறவாரியத்தின் தலைவர் ராஜிவ் ஷா.

ராக்பெல்லர் எண்ணெய் வளத் தொழிலில் ஈடுபட்டிருந்த போது உருவாக்கிய நிறுவனம் ஸ்டாண்டர்ட் ஆயில் (Standard Oil). இதன் மூலம் கிடைத்த பெரும் செல்வத்தைக் கொண்டுதான் அறப்பணிகளுக்காக ராக்பெல்லர் அறவாரியத்தை உருவாக்கினார் ராக்பெல்லர்.

இன்றைக்கு பெரும் எண்ணெய் நிறுவனமான எக்சோன்மோபில், உருவானது அன்றைய ஸ்டாண்டர்ட் ஆயில் நிறுவனத்திலிருந்துதான்!

ராக்பெல்லர் அறவாரியம் போன்று பல பெரும் நிறுவனங்கள், அமைப்புகள் மெல்ல மெல்ல எண்ணெய் தொழிலில் இருந்து தங்களை விலக்கிக் கொண்டு வருகின்றன.

அண்மையில் மற்றொரு மாபெரும் எண்ணெய் நிறுவனமான ஷெல் நிறுவனமும் ஹைட்ரஜன் எனப்படும் நீரக வாயு மூலம் இயங்கும் எதிர்கால விமானத் தொழில்நுட்பத்தைக் கொண்ட நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறது.

வாகனங்கள் தற்போது மின்சாரத்தைக் கொண்டு இயங்கும் தொழில்நுட்பத்திற்கு மாறி வருகின்றன. இந்த வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் டெஸ்லா போன்ற நிறுவனங்களின் பங்கு விலைகள் நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றன.