ஜோர்ஜ் டவுன்: தைப்பூசத்தை முன்னிட்டு இரத ஊர்வலம் இந்த வருடம் அனேகமாக இரத்து செய்யப்படலாம். கொவிட்-19 தொற்று காரணமாக அதிகமானோர் ஒரே இடத்தில் கூடக் கூடாது என்ற நடைமுறை இருக்கும் பட்சத்தில் இந்த முடிவு எடுக்கப்படலாமென பேராசிரியர் பி.இராமசாமி தெரிவித்தார்.
கொவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் இந்த ஆண்டு தைப்பூசத்தை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க மாநிலத்தின் தொடர் கூட்டங்கள் நடைபெறும் என்று பினாங்கு இந்து அறவாரியத் தலைவருமான அவர் தெரிவித்தார்.
“எங்கள் முன்னுரிமை அனைத்து பக்தர்களின் பாதுகாப்பிலும் உள்ளது. ஏனெனில் இரத ஊர்வலம் என்றால் கூட்டம் கூடும், கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். தைப்பூச ஒன்றுகூடல் எந்தவொரு புதிய தொற்றுக் குழுவையும் தூண்டுவதை நாங்கள் விரும்பவில்லை, ” என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.
“தைப்பூசத்தின் போது இரத ஊர்வலம் வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. நான் எதையும் முன்கூட்டியே சொல்ல விரும்பவில்லை. தொடர்ச்சியான கூட்டங்களை நடத்துவோம், சுகாதார வல்லுநர்கள் முடிவு செய்யட்டும், ” என்று அவர் கூறினார்.
சுகாதாரத் துறை, தேசிய பாதுகாப்பு மன்றம் மற்றும் காவல் துறையினருடன் கலந்துரையாடிய பின்னர், தைப்பூசம் கொண்டாட்டம் குறித்த விரிவான நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகள் ஜனவரி முதல் வாரத்தில் வெளிவரும் என்று அவர் தெரிவித்தார்.
“மக்கள், மத விஷயங்கள் பொறுத்தவரை, மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடும். ஆனால், மக்களின் நலனுக்காக, அதிகாரத்தால் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து நடைமுறைகளையும் கடைபிடிக்குமாறு அவர்களுக்கு நான் நினைவூட்ட விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
கொவிட் -19 தொற்றுநோய் இன்னும் உள்ளது என்பதை மக்கள் அறிந்திருக்கிறார்கள் என்றும், அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு இணங்கத் தவறினால் அவர்கள் உடல்நலத்திற்கு ஆபத்து ஏற்படும் என்றும் அவர் கூறினார்.