மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரன் கிறிஸ்துமஸ் பெருநாளை முன்னிட்டு வழங்கிய வாழ்த்துச் செய்தி
அன்பு, மனிதாபிமானம், சகோதரத்துவம், மத நல்லிணக்கம் என மனித வழ்க்கைக்குத் தேவையான பல நல்ல ஒழுக்கங்களைக் கற்றுத் தந்த இயேசுபிரானின் பிறந்த நாளைக் கிறிஸ்துமஸ் தினமாகக் கொண்டாடி மகிழும் அனைத்து மலேசிய கிறிஸ்துவ சமூகத்தினருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
மத நல்லிணக்கத்திற்கும், சுதந்திரத்திற்கும் உலகிற்கே எடுத்துக் காட்டாகத் திகழும் நாடுகளில் ஒன்று மலேசியா. அதன் காரணமாகவே, நமது நாட்டில் பல்லாயிரக்கணக்கானோர் கிறிஸ்துவ மதத்தை சுதந்திரமாகப் பின்பற்றுபவர்களாக இருக்கின்றனர். நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான கிறிஸ்துவ தேவாலயங்களும் எல்லா முக்கிய நகர்களிலும் வீற்றிருக்கின்றன. அவற்றில் ஒருசில தேவாலயங்கள் சில நூறு ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டவை.
இது போன்ற பழமையான மத வழிபாட்டுத் தலங்களை, அவை எந்த மதத்தைச் சார்ந்தவையாக இருந்தாலும் நாம் மதித்துப் போற்றிக் கொண்டாட வேண்டும். இதன் காரணமாகவே, உலகின் பல்வேறு வழிபாட்டுத் தலங்களை பாரம்பரிய வரலாற்று இடங்களாக ஐக்கிய நாடுகள் மன்றமும் அங்கீகரித்திருக்கிறது.
அவ்வப்போது, ஒரு சில தீவிரவாதப் போக்கு கொண்ட மதவாத அரசியல்வாதிகளினால், நமது நாட்டில் சில குழப்பங்கள் ஏற்பட்டாலும், மக்களைப் பொறுத்தவரை பெரும்பான்மையான மலேசியர்கள் ஒருவரை ஒருவர் இன, மத பேதமின்றி மதித்து நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகின்றனர்.
மலேசியர்களுக்கே உரித்தான இந்த அடையாளம் தொடர்ந்து பேணப்பட்டு வர, நிலைநாட்டப்பட நாம் அனைவரும் பாடுபடுவோம்.
இந்திய சமூகத்திலும் கணிசமான பிரிவினர் கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றுகின்றனர். நமது தாய்க் கட்சியான மஇகாவிலும் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்துவ சகோதர, சகோதரிகள் பல்லாண்டுகளாக தீவிரமாக ஈடுபட்டு வந்திருக்கின்றனர். இந்தியர்கள் அனைவரையும் மத பாகுபாடின்றி அரவணைத்துச் செல்லும் மஇகாவிலும் பல கிறிஸ்துவ அன்பர்கள் கிளை, தொகுதி, மாநிலம், தேசிய அளவிலும் பதவி வகித்து வருகின்றனர். மஇகா மூலமாக அரசாங்கப் பதவிகளிலும் நியமனம் பெற்றிருக்கின்றனர்.
அவர்கள் அனைவருக்கும் எனது தனிப்பட்ட சார்பிலும் மஇகா மத்திய செயலவை சார்பிலும் கிறிஸ்துமஸ் தினத்தை மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாட எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்,
இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், கொவிட்-19 பாதிப்புகளால் வழக்கமான கொண்டாட்டமாக இருக்காது என்பதை கிறிஸ்துவ சமூகத்தினரும் உணர்ந்திருப்பார்கள் என நம்புகிறேன். கொவிட் தொற்று பரவலைத் தடுக்க அரசாங்கம் பலமுனைகளிலும் பாடுபட்டு வருகிறது. தடுப்பூசிகளை மக்கள் கூடியவிரைவில் பெறுவதற்கு அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் எடுத்துள்ளது.
எனவே, இந்த கிறிஸ்துமஸ் தினத்தை உற்சாகத்தோடு, உறவினர்களோடு கொண்டாடி மகிழும் அதே வேளையில் அரசாங்கம் நிர்ணயித்துள்ள நிபந்தனைகளையும், கட்டுப்பாடுகளையும் பின்பற்றி கிறிஸ்துவ சமூகத்தினர் அரசாங்க முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இயேசுநாதரின் நல்ல பல போதனைகளை நினைவு கூர்ந்து அனைவரும் கிறிஸ்துமஸ் நல்லிணக்கத்தோடும், புரிந்துணர்வோடும் கொண்டாடி மகிழ்வோம்.