Home One Line P1 “கொவிட் காலகட்டத்தில் நமக்காகவும், பிறருக்காகவும் சிந்தித்து செயல்படுவோம்” – சரவணன் கிறிஸ்மஸ் வாழ்த்து

“கொவிட் காலகட்டத்தில் நமக்காகவும், பிறருக்காகவும் சிந்தித்து செயல்படுவோம்” – சரவணன் கிறிஸ்மஸ் வாழ்த்து

480
0
SHARE
Ad

மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் கிறிஸ்துமஸ் பெருநாளை முன்னிட்டு வழங்கிய கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி

கிறிஸ்துமஸ் தினத்தைக் கொண்டாடும் அனைத்து அன்பர்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள். டிசம்பர் 25ஆம் நாளான இன்று, ஏசு கிறிஸ்துவின் பிறந்த நாள் கிறிஸ்துவ மதத்தினரால் கொண்டாடப்படுகிறது. இதனை உலக மக்கள் அனைவருமே கோலாகலமாக வரவேற்று, புத்தாண்டு வரை அந்த கொண்டாட்டம் நீடிப்பது வழக்கம்.

அதிலும் மலேசியர்கள் ஒவ்வொரு பெருநாளையுமே மிகவும் குதூகலமாக, மகிழ்ச்சியாகக் கொண்டாடுவது வழக்கம். நாம் ஒரு பெருநாளை அனுசரிக்கவில்லை என்றாலும், அனைத்து மலேசியர்களுக்கும் பொது விடுமுறை என்பதால், அதில் ஒரு தனி மகிழ்ச்சிதான். பெரும்பாலானோர் வருட இறுதியில் குடும்பத்தோடு உல்லாச சுற்றுலா செல்வதும் வழக்கம்.

இப்படி ஒன்று கூடி ஒற்றுமையாக ஒவ்வொரு பெருநாளையும் நாம் கொண்டாடி வந்த வேளையில், இந்த வருடம் முழுவதுமே எந்தப் பெருநாளையும் நாம் இதுவரை கொண்டாடிய வகையில் கொண்டாட முடியவில்லை.

#TamilSchoolmychoice

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது தேவாலயங்கள் மற்றும் இல்லங்கள் தோறும் அழகிய கிறிஸ்துமஸ் குடில் அமைத்து கிறிஸ்துவ அன்பர்கள் குடும்ப உறுப்பினர்களோடு, மகிழ்ச்சியாக ஏசுவின் பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்வார்கள். தேவாலயங்களுக்குச் சென்று ஏசுநாதரை தரிசித்து வருவார்கள். இவை வழக்கமான ஒன்று என்றாலும் இன்றைய காலகட்டத்தில் நாம் அனைத்துலக அளவிலான  பரவலைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள்தான், ஆனாலும் பல இடங்களுக்கு வெளியில் சென்று வருவதால், ஒருவருக்கொருவர் இடைவெளிவிட்டு இருப்பது, அடிக்கடி கைகளைக் கழுவுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

நண்பர்கள், உறவினர்களை அழைத்து ஒன்று கூடல் நிகழ்ச்சிகளை முடிந்தவரை தவிர்க்கப் பாருங்கள். இல்லையேல் குறைந்த எண்ணிக்கையில் வெவ்வேறு தருணத்தில் வரவேற்று உபசரியுங்கள். சிலவேளைகளில் அனைவரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இப்படிப்பட்ட தியாகங்களை நாம் செய்ய வேண்டியுள்ளது.
அந்த வகையில் இந்த கிறிஸ்துமஸ் தினத்தில், நாம் இன்னும் சில இடங்களில் நடமாட்டக் கட்டுப்பாட்டின் கீழ்தான் உள்ளோம். சில இடங்களில் கட்டுப்பாடு இல்லை என்றாலும் நாளுக்கு நாள் பெருகி வரும் கொரோனாவைத் தடுக்க நமக்கு நாமே கட்டுப்பாட்டோடு இருப்பது அவசியம்.

கொரோனா முற்றிலும் அழிந்தால் மட்டுமே நாம் அனைவரும் சுபிட்சமான வாழ்க்கைக்குத் திரும்ப முடியும். காரணம் இது சுகாதாரப் பிரச்சனை மட்டுமல்ல, அதைவிட விஸ்வரூபம் எடுத்து வரும் பொருளாதார பிரச்சனையும் கூட. சிலருக்கு வாழ்வாதாரம் தடைபட்டு சில, பல மாதங்கள் ஆகியிருக்கலாம். அதனால் உடைந்து வரும் குடும்ப உறவுகளும், சமுதாய பாதிப்புகளும் அதிகம்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் என்பது அன்பின் வெளிப்பாடே!

அன்பையும், அர்ப்பணிப்பையும் உணர்த்தும் ஏசுவின் பிறந்தநாளில், கொண்டாட்ட மகிழ்ச்சியில் நமக்காகவும், பிறருக்காகவும் சிந்தித்து செயல்படுவோம்.

மீண்டும் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்.

“உங்கள் நலன் பேணும் உங்களில் ஒருவன்”

டத்தோ ஸ்ரீ எம்.சரவணன்
மனிதவள அமைச்சர்
ம.இ.கா தேசிய துணைத்தலைவர்