அவர் நடித்துக் கொண்டிருந்த அண்ணாத்தே படப்பிடிப்புத் தளத்தில் 8 பேர் கொவிட்-19 தொற்று கண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து படப்பிடிப்புகள் இரத்து செய்யப்பட்டன.
அதைத் தொடர்ந்து ரஜினிக்கான பரிசோதனையில் அவருக்கு கொவிட் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. எனினும் தன்னைத்தானே அவர் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார் என அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இருப்பினும் அவரது இரத்த அழுத்தம் அடிக்கடி ஏற்ற இறக்கமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட காரணத்தால் அவர் இன்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 25) காலையில் ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனை உறுதிப்படுத்தி அப்போலோ மருத்துவமனையும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
ரஜினிக்கு கொவிட் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்திய அப்போலோ மருத்துவமனை, அவரது இரத்த அழுத்தம் அடிக்கடி ஏற்ற இறக்கத்தோடு இருந்த காரணத்தால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் எனவும் தனது அறிக்கையில் தெரிவித்தது.
எதிர்வரும் டிசம்பர் 31-ஆம் தேதி தனது புதிய கட்சியின் அறிவிப்பை ரஜினி வெளியிடுவார் என்ற தகவல்களுக்கு இடையில் தற்போது அவர் மருத்துவமனையில் இருப்பதாலும், தனிமைப்படுத்தலில் இருப்பதாலும் அவரது புதிய கட்சியின் தொடக்கம் திட்டமிட்டபடி டிசம்பர் 31-ஆம் நாள் நடைபெறுமா என்ற ஐயப்பாடு தற்போது எழுந்துள்ளது.