கோலாலம்பூர்: அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின் சைக்கிள் பயணத்தின் போது, அவரது சைக்கிள் சக்கரம் குழியில் சிக்கி கீழே விழ்ந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றது.
இதன் அடுத்து, கோலா லங்காட் பொதுப்பணித்துறை, அமைச்சரிடம் மன்னிப்பு கோரியுள்ளது. கைரி ஜமாலுடின் பதிவிட்டுள்ள பதிவில் அவரது முகத்தில் ஏற்பட்டுள்ள காயங்கள் மட்டும், சாலையில் உள்ள குழியும் பதிவேற்றப்பட்டுள்ளது.
அவருக்கு இடது நெற்றியில், மூக்கு மற்றும் வாயில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், கைரியின் உதவியாளர் ராஜா சியாஹிர் அபுபக்கர், அமைச்சருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தீவிரமான காயங்கள் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் கைரிக்கு பதிலளித்த கோலா லங்காட் பொதுப்பணித்துறை தனது மன்னிப்பை தெரிவித்தது.
“கோலா லங்காட் ஜே.கே.ஆர் அமைச்சருக்கு நேர்ந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சர் விரைவில் குணமடைய வேண்டுகிறோம்,” என்று அது குறிப்பிட்டுள்ளது.