ஜோகூர், ஏப்ரல் 17 – ஜோகூர் மந்திரி பெசார் அப்துல் கனி ஒத்மானின் அரசியல் வாழ்கையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் தான் அம்னோ அவரை கேலாங் பாத்தா தொகுதியில், லிம் கிட் சியாங்கிற்கு எதிராக நிறுத்தியிருப்பதாக ஜ.செ.க கூறிவருகிறது.
நேற்று ஜோகூர் மாநிலம் கூலாய் தொகுதியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஜ.செ.க பொதுச் செயலாளர் லிம் குவான் எங், “கனி இனி தேவையில்லை என்று அம்னோ நினைப்பதால் தான் அவரை கேலாங் பாத்தா தொகுதியில் எனது தந்தைக்கு எதிராக நிறுத்தியிருக்கிறது.
மசீச தலைவர் சுவா சொய் லெக்கிற்கு கேலாங் பாத்தாவில் போட்டியிட துணிவில்லை என்பதால், கனி அம்னோவின் வற்புறுத்தலால் கேலாங் பாத்தாவில் போட்டியிட ஒப்புக்கொண்டுள்ளார்” என்று கூறியுள்ளார்.
இதற்கேற்றார் போல் அப்துல் கனி ஒத்மானும்(படம்) இன்று செய்தியாளர்களிடம்,
“மந்திரி பெசார் பதவிலிருந்து விலகிக் கொள்வதில் எனக்கு சந்தோஷம் தான்.கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் நான்கு முறை பதவியில் இருந்துவிட்டேன். என்னால் முடிந்த அளவிற்கு எனது தொகுதி மக்களுக்கு சேவை செய்துவிட்டென். எனவே இனி வேறொருவர் மந்திரி பெசார் ஆவதில் எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.
கனிக்கு பதிலாக மந்திரி பெசார் பதவியில், உயர் கல்வி அமைச்சரான காலிட் நோர்தீனை அமர்த்தும் நோக்கில் தான், அம்னோ அவரை பாசீர் கூடாங் தொகுதியிலிருந்து பெர்மாஸ் தொகுதிக்கு இடமாற்றி இருப்பதாக ஜோகூர் அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப் படுகிறது.