Home One Line P1 189 அம்னோ தொகுதிகள் பெர்சாத்துவுக்கு எதிர்ப்பு – ஆட்டம் காண்கிறதா தேசியக் கூட்டணி ஆட்சி?

189 அம்னோ தொகுதிகள் பெர்சாத்துவுக்கு எதிர்ப்பு – ஆட்டம் காண்கிறதா தேசியக் கூட்டணி ஆட்சி?

490
0
SHARE
Ad

கோலாலம்பூர் : கடந்த வார இறுதியில் நாடு முழுமையிலும் பல அம்னோ தொகுதிக் கூட்டங்கள் நடந்து முடிந்திருக்கும் நிலையில், அம்னோ தலைமைத்துவத்தின் கணக்கெடுப்பின்படி நாட்டில் மொத்தம் உள்ள 191 அம்னோ தொகுதிகளில் 189 தொகுதிகள் பெர்சாத்துவுடன் இனியும் அரசியல் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என முடிவெடுத்திருக்கின்றன.

இதன் காரணமாக ஆளும் தேசியக் கூட்டணி அரசாங்கத்திற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருப்பதோடு, அம்னோ நடப்பு அரசாங்கத்திலிருந்து விலகிக் கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.

மொகிதின் யாசின் இந்தப் புதிய நெருக்கடியை எப்படிக் கையாளப் போகிறார் என்பதை அரசியல் பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

மொகிதின் பெரும்பான்மையை இழந்தால் அவர் பதவி விலகக் கூடும். அல்லது நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு 15-வது பொதுத் தேர்தலை நடத்த ஒப்புதல் வழங்கும்படி அவர் மாமன்னரைக் கேட்டுக் கொள்ளக் கூடும்.

நாட்டின் அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கும் பெரும் பொறுப்பு மீண்டும் மாமன்னரின் கரங்களில் ஒப்படைக்கப்படலாம்.

இதற்கிடையில் இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தை மீண்டும் நிர்மாணிக்க முயற்சிகள் எடுத்து வருவதாகவும் நாடாளுமன்றப் பெரும்பான்மை ஆதரவு தனக்கு இருக்கிறதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் பொறுப்பு மாமன்னருக்கு மட்டுமே இருக்கிறது என்று கூறினார்.

“இதற்கான நடைமுறை படலங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. நான் மாமன்னருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளேன். மாமன்னர் இப்போதுதான் கொவிட் தொற்று அபாயம் காரணமாக தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளார். நாம் காத்திருப்போம். அடுத்த பிரதமரைத் தீர்மானிக்கும் பொறுப்பு முழுக்க முழுக்க மாமன்னரைச் சார்ந்தது அது குறித்து நான் கருத்துரைக்க விரும்பவில்லை” என அன்வார் கூறினார்.

அம்னோ கட்சியினரின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைக்க முடியுமா என அன்வாரிடம் கேட்கப்பட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். மாமன்னர் சுல்தான் அப்துல்லா தனது வருகையை முடித்துக்கொண்டு மலேசியாவுக்கு திரும்பியவுடன் டிசம்பர் 26 முதல் தன்னை சுகாதார அமைச்சின் நடைமுறைகளுக்கு ஏற்ப தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ள மாமன்னரின் தனிமைப்படுத்தலுக்கான கால அவகாசம் கடந்த சனிக்கிழமை ஜனவரி 2-ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது

சில அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் அன்வார் மீண்டும் ஆட்சி அமைக்க முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறார் என தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இருப்பினும் கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி 2021 வரவு செலவு திட்டம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது 3 வாக்குகள் பெரும்பான்மையில் அந்தத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டது. இதன் மூலம் நடப்பு நாடாளுமன்றத்தில் தேசியக் கூட்டணி அரசாங்கம் 111 பெரும்பான்மை பெற்றிருப்பதும் எதிர்க்கட்சிகள் கூட்டாக 108 இடங்களைப் பெற்று இருப்பதும்  உறுதியானது.

இதைத்தொடர்ந்து அண்மையில் ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் அமானா தலைவர் முகமட் சாபு இருவரும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் அரசாங்கத் தரப்பிலிருந்து கட்சி மாறி நம் பக்கம் வருபவர்களுக்காகக் காத்திருப்பதை விடுத்து அடுத்த கட்டமாக நமது அரசியல் நகர்வை நாமே முடிவு எடுப்போம் என அறிவித்தனர்

அனைத்து எதிர்க்கட்சித் தரப்புகளையும் நம்பிக்கை கூட்டணியுடன் இணைத்து பக்காத்தான் ஹரப்பான் பிளஸ் என்ற மாபெரும் கூட்டணியை உருவாக்க வேண்டுமென லிம் குவான் எங் அறைகூவல் விடுத்திருக்கிறார்.

முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் அன்வாரை ஆதரிக்கும் முடிவை எடுத்து இருந்தாலும் ஜனநாயக செயல் கட்சி உடன் இணைந்து பணியாற்ற மாட்டோம் என்று நிபந்தனை விதித்திருக்கிறார்.

இதையே சில அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆமோதித்திருக்கின்றனர்.

மிகக்குறுகிய பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சியில் ஊசலாடிக் கொண்டிருக்கும் மொகிதின் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணி அரசாங்கம் அம்னோவின்  தொடர் தாக்குதலால் எந்த நேரத்திலும் கவிழும் நிலை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்து பிரதமர் பதவி விலகி நம்பிக்கை கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க முயற்சி செய்யும் என்ற தகவல்கள் ஒரு புறம் வந்து கொண்டிருக்கின்றது.

இன்னொரு புறத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 15ஆவது பொதுத் தேர்தலுக்கு வழிபடப்படும் என்ற தகவல்களும் தெரிவிக்கப்படுகின்றன.

-இரா.முத்தரசன்