இலண்டன்: இங்கிலாந்தில் முழு கொவிட்-19 தொற்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பிப்ரவரி நடுப்பகுதி வரையிலும் இந்த கட்டுப்பாடு நீடிக்கும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் திங்கட்கிழமை (ஜனவரி 4) தெரிவித்தார்.
புதன்கிழமை முதல் பிரிட்டனில் இந்த கடுமையான கட்டுப்பாடு நடைமுறைக்கு வரும் என்று அவர் ஓர் உரையில் தெரிவித்தார்.
இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக அதிகமான இறப்பு விகிதம் ஏற்பட்டு வரும் நிலையில், அங்கு இப்போது, கிட்டத்தட்ட 27,000 பேர் இந்த தொற்றுக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த செவ்வாயன்று, 24 மணி நேரத்தில் 80,000- க்கும் அதிகமான மக்கள் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
பிரிட்டனில் கொவிட்-19 தொற்று தற்போது முன்பை விட கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் நிலைக்கு மாறியுள்ளதை அடுத்து அங்கு நிலைமை மோசமாகி உள்ளது. மேலும், இந்த புதிய திரிபு வேறு உலக நாடுகளுக்கும் பரவி உள்ளது பதிவு செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில், 70 விழுக்காடு வேகமாகப் பரவும் நச்சுயிரி பரவி வருவதாக சுகாதாரத் துறை அண்மையில் குறிப்பிட்டிருந்தது.
அண்மையில், 44 மில்லிய்ன மக்களுக்கு இங்கிலாந்தில் பல்வேறு இடங்களில் தீவிர கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.