Home One Line P1 நஜிப், செத்தி அசிஸை முகநூலில் தாக்கி பேசக்கூடாது என நீதிமன்றம் எச்சரிக்கை

நஜிப், செத்தி அசிஸை முகநூலில் தாக்கி பேசக்கூடாது என நீதிமன்றம் எச்சரிக்கை

556
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், அரசு தரப்பு சாட்சியும், முன்னாள் பேங்க் நெகாரா ஆளுநருமான செத்தி அக்தார் அசிஸை முகநூலில் தாக்க வேண்டாம் என்று நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை எச்சரித்தது.

2.28 பில்லியன் ரிங்கிட் 1எம்டிபி நிதி ஊழல் வழக்கு விசாரணையின் போது இந்த எச்சரிக்கையை நீதிபதி கொலின் லாரன்ஸ் செக்வெரா இன்று வழங்கினார்.

1எம்டிபி தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக செத்திக்கு எதிராக நஜிப் முகநூலில் பதிவிட்டதைத் தொடர்ந்து ஜனவரி 5- ஆம் தேதி அரசு தரப்பு இந்த எச்சரிக்கையை வெளியிடுமாறு கோரியது.

#TamilSchoolmychoice

இது டிசம்பர் 29 தேதியிட்ட ஒரு முகநூல் இடுகையைத் தொடர்ந்து எழுப்பப்பட்டது. அதில் 1எம்டிபி நிறுவனத்தின் நிதி தொடர்பாக செத்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இருந்தன.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, செத்தி அக்குற்றச்சாட்டுகளை மறுத்து ஓர் ஊடக அறிக்கையை வெளியிட்டார்.

“குற்றம் சாட்டப்பட்டவர் பகிரங்கமாக பொதுவில் ஒரு விசாரணையை மேற்கொள்வது போல் அறிக்கையை வெளியிட முடியாது. வழக்கு விசாரணை தொடர்பாக எந்த அறிக்கையும் வெளியிட முடியாது. குற்றம் சாட்டப்பட்டவரின் அறிக்கை அரசு தரப்பு சாட்சி மீதான தாக்குதலுக்கு சமம். எனவே, விசாரணையின் நேர்மையை நிலைநிறுத்துவதற்காக இந்த செயலை மீண்டும் செய்ய வேண்டாம் என்று நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கிறது,” என்று நஜிப்பிடம் செக்வெரா கூறினார்.

அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக நான்கு குற்றச்சாட்டுகள் மற்றும் 1எம்டிபி நிதி சம்பந்தப்பட்ட 21 பண மோசடி குற்றச்சாட்டுகளில் நஜிப் மீது வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.