Home One Line P1 “நஜிப்பின் தாயார் துன் ராஹா – சில சுவாரசியத் தகவல்கள்”

“நஜிப்பின் தாயார் துன் ராஹா – சில சுவாரசியத் தகவல்கள்”

848
0
SHARE
Ad

Selliyal Video| Najib’s mother Tun Rahah – Some interesting facts|
29 December 2020

 

நஜிப் தாயார் துன் ராஹா – சில சுவாரசியத் தகவல்கள்” என்ற தலைப்பில் கடந்த  29 டிசம்பர் 2020 செல்லியல் யூடியூப் காணொலித் தளத்தில் பதிவேற்றம் கண்ட மேற்கண்ட காணொலியின் கட்டுரை வடிவம் ;

கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி தனது 87-வது வயதில் காலமான நஜிப் துன் ரசாக்கின் தாயார் துன் ஹாஜா ராஹா முகமட் நோவா, மலேசியாவின் அரசியல் வரலாற்றுப் பக்கங்களோடு பின்னிப் பிணைந்த வாழ்க்கை வாழ்ந்தவர்.

#TamilSchoolmychoice

பல மறக்க முடியாத அரசியல் நடப்புகள், சம்பவங்கள், குடும்பப் பின்னணி கொண்டவர் தோபுவான் ராஹா. அவரது வாழ்க்கையின் சில சுவாரசியமானப் பக்கங்களை நினைவு கூர்வோம் :

  • 11 ஜூன் 1933-ஆம் ஆண்டில் ஜோகூர் மாநிலத்தின் மூவார் வட்டாரத்தில் பிறந்தவர் துன் ராஹா.
  • தோபுவான் ராஹா பத்து சகோதர, சகோதரிகளைக் கொண்ட குடும்பத்தில் ஆக இளையவர். ஜோகூர்பாரு இடைநிலைப் பள்ளியில் கல்வி கற்ற ராஹாவுக்கு குடும்ப நண்பர் ஒருவர் துன் ரசாக்கை அறிமுகப்படுத்தி வைத்தார்.
  • காதல் வயப்பட்ட ராஹாவும் துன் ரசாக்கும் 4 செப்டம்பர் 1952-ஆம் ஆண்டில் திருமணம் புரிந்து கொண்டனர். ஜோகூர் மாநிலத்துக்காரரான துன் ராஹா பகாங் மாநிலத்தில் இருந்து அரசியலில் காலடி வைத்த துன் ரசாக்கைக் கைப்பிடித்தார்.
  • அவர்களுக்கு 5 ஆண் பிள்ளைகள். அவர்களில் மூத்தவர் முன்னாள் பிரதமர்  நஜிப். ஆக இளையவர் சிஐஎம்பி வங்கியின் முன்னாள் தலைவர் நசிர் ரசாக்.
  • ராஹாவின் கணவர் துன் ரசாக் மலேசியாவின் இரண்டாவது பிரதமராகப் பதவி வகித்தவர். மகன் நஜிப் துன் ரசாக்கும் மலேசியாவின் பிரதமராகப் பதவி வகித்தவர். அந்த வகையில் தனது கணவர் தனது மகன் இருவரும் பிரதமராகப் பதவி வகித்த காட்சிகளை தனது வாழ்நாளிலேயே தன் கண் முன்னாலேயே பார்த்த பெருமைக்குரியவர் ராஹா.
  • கணவர் துன் ரசாக் பிரதமராக வலம் வந்த காலங்களில் கூட ராஹா பகிரங்கமாகவோ, பகட்டாகவோ, உலா வந்ததில்லை. மிகுந்த தன்னடக்கத்தோடு வாழ்ந்தார். தனது கணவரையும், குடும்பத்தையும், ஐந்து குழந்தைகளையும் கவனித்து வளர்ப்பதிலுமே அக்கறை செலுத்தினார்.
  • பிரதமராக இருந்த துன் ரசாக் மரணமடைந்தபோது ராஹாவின் வயது 43-தான்.
  • கணவர் துன் ரசாக்கின் மறைவுக்குப் பின்னர் அவர் பெரும்பாலும் எந்தவிதப் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டதில்லை. குடும்ப நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொண்டார். அவர் எப்படி இருக்கிறார், எங்கிருக்கிறார் என்பது போன்ற விவரங்களும் வெளியிடப்பட்டதில்லை.
  • பின்னர் தனது மகன் நஜிப் பிரதமரான போது கூட, தாயார் என்ற முறையில் கூட அவர் எந்தவிதப் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டதில்லை.  பெரும்பாலும் வீட்டுடனே இருந்தார். குடும்ப நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கு பெற்றார்.

  • ராஹாவின் மூத்த சகோதரி துன் சுஹைலா. ராஹாவை விட இரண்டு வயது மூத்தவர். சுஹைலா மலேசியாவின் மூன்றாவது பிரதமர் துன் ஹூசேன் ஓனை மணந்தவர். சுஹைலாவின் மகன்தான் தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹூசேன் ஓன்.
  • ஒரே காலகட்டத்தில் வாழ்ந்த இரண்டு சகோதரிகளும் அடுத்தடுத்த இரண்டு பிரதமர்களை மணந்தவர்கள் என்பது எந்த நாட்டிலும் பார்க்க முடியாத இன்னொரு அபூர்வமான – சுவாரசியமானத் தகவல்.
  • ஒரே குடும்பத்தின் இரு சகோதரிகள், அவர்களின் கணவர்கள் என நால்வர் ‘துன்’ என்ற உயரிய விருதுடன் உலா வந்ததும் மலேசியாவின் வேறு எந்தக் குடும்பத்திலும் பார்க்க முடியாத அதிசயம்.
கணவரும் முன்னாள் பிரதமருமான துன் ஹூசேன் ஓனுடன் துன் ராஹாவின் மூத்த சகோதரி துன் சுஹைலா

 

  • ராஹா, சுஹைலா சகோதரிகளின் தந்தையான டான்ஸ்ரீ முகமட் நோவா ஓமார் (Tan Sri Mohammad Noah Omar) ஓன் ஜபாருடன் இணைந்து அம்னோவைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர்.
  • ஓன் ஜபாருக்கும், முகமட் நோவாவுக்கும் இடையில் இருந்த நட்புதான், அவர்கள் பிள்ளைகள் இருவரையும் சந்திக்கவும் வைத்து, கால ஓட்டத்தில் அவர்களை சம்பந்திகளாகவும் ஆக்கியது.
  • ஓன் ஜபாருடன் அம்னோவை விட்டு வெளியேறாமல், தனது அரசியலைத் தொடர்ந்த முகமட் நோவா, சுதந்திரம் கிடைத்ததும், முதல் மலேசிய நாடாளுமன்றத்தின் அவைத் தலைவராக பணியாற்றினார். பின்னர் அமைச்சராகவும் இருந்திருக்கின்றார்.
  • துன் ராஹாவின் மூத்த சகோதரி துன் சுஹைலா கடந்த 4 அக்டோபர் 2014-இல் காலமானார். அவருக்கும் தேசிய மரியாதையுடன் கூடிய நல்லடக்கச் சடங்கு கௌரவம் வழங்கப்பட்டது. தலைநகர் தேசியப் பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர்கள் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
  • தனது மூத்த சகோதரி சுஹைலாவின் கல்லறைக்கு அருகிலேயே டிசம்பர் 19-ஆம் தேதி துன் ராஹாவும் நல்லடக்கம் செய்யப்பட்டார்.