Home One Line P2 “ஏ.ஆர்.ரஹ்மான் தாயாரும் மலேசியாவின் புலாவ் பெசார் தீவும்”

“ஏ.ஆர்.ரஹ்மான் தாயாரும் மலேசியாவின் புலாவ் பெசார் தீவும்”

1458
0
SHARE
Ad

Selliyal Video|A.R Rahman’s mother & Malaysia’s mystic island Pulau Besar | 30 December 2020

“ஏ.ஆர்.ரஹ்மான் தாயாரும் மலேசியாவின் புலாவ் பெசார் தீவும்” என்ற தலைப்பில் கடந்த 30 டிசம்பர் 2020-ஆம் நாள் செல்லியல் யூடியூப் காணொலித் தளத்தில் இடம் பெற்ற மேற்கண்ட செல்லியல் காணொலியின் கட்டுரை வடிவம்:

கடந்த திங்கட்கிழமை டிசம்பர் 28-ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் தாயார் கரீமா பேகம்.

மிக இளம் வயதிலேயே தந்தையை இழந்த ரஹ்மானைக் கண்ணும் கருத்துமாக வளர்த்தெடுத்ததிலும், அவரை இசைத்துறையில் ஈடுபடுத்தி இன்று உலகளாவிய அளவில் புகழ் உச்சிக்குக் கொண்டு சென்றதிலும் ரஹ்மானின் தாயார் பெரும் பங்கு வகித்தார்.

#TamilSchoolmychoice

ரஹ்மானும் தனது தாயார் மீது மட்டற்ற பாசமும் மரியாதையும் வைத்திருந்தார்.

சரி! ரஹ்மான் தாயாருக்கும் மலேசியாவில் உள்ள புலாவ் பெசார் என்று அழைக்கப்படும் மலாக்காவுக்கு அருகில் இருக்கும் தீவுக்கும் என்ன தொடர்பு?

கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்!

புலாவ் பெசார் தீவு

புலாவ் (Pulau) என்றால் மலாய் மொழியில் தீவு என்று அர்த்தம். பெசார் (Besar) என்றால் “பெரிய” எனப் பொருள் கொள்ளப்படும்.

பெயரளவில் “பெரிய தீவு” என்று அழைக்கப்பட்டாலும் சுமார் 168 ஹெக்டர் பரப்பளவு மட்டுமே கொண்ட சிறிய தீவுதான் புலாவ் பெசார்.

மலாக்கா நகரிலிருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள அஞ்சோங் பத்து படகுத் துறையில் இருந்து தினமும் படகுச் சேவைகள் புலாவ் பெசார் தீவுக்கு மேற்கொள்ளப்படுகின்றன.

இங்கு அமைந்திருக்கும் இஸ்லாமியப் பெரியவர்களின் பிரம்மாண்டமான சமாதிகள் ஆன்மீக சக்தி வாய்ந்தவைகளாகக் கருதப்படுகின்றன. எனவே, தினமும் நூற்றுக்கணக்கானோர் இங்கு வந்து வழிபாடுகள் நடத்துகின்றனர். இஸ்லாமிய முறைப்படி ‘துவா’ அல்லது ‘பாத்தியா’ எனப்படும் புனித குரான் வாசகங்கள் ஓதப்படுகின்றன.

எல்லா மதத்தினரும் பல்வேறு காரணங்களுக்காக இங்கு வருகின்றனர். குறிப்பாக இந்துப் பெருமக்கள் அதிக அளவில் வருகின்றனர். ஏறத்தாழ தினமும் இங்கு அசைவ  வகை உணவுகள் அன்னதானமாக வழங்கப்படுகின்றன. இதனை பல இந்து அன்பர்களும், இந்திய அமைப்புகளும் வழங்கி வருகின்றன.

நடிகர் பாண்டு

இந்தத் தீவுக்கு அடிக்கடி வந்து செல்லும் தமிழக நடிகர்களில் ஒருவர் நடிகர் பாண்டு. பல படங்களில் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர். இந்தத் தீவில் இஸ்லாமியச் சித்தர்களின் ஆன்மீக சக்தி சூழ்ந்திருப்பதாக நம்புகிறார் இவர்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் தமிழகத்தின் வேந்தர் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் புலாவ் பெசார் தீவு குறித்த சில சுவாரசியங்களைப் பாண்டு பகிர்ந்து கொண்டார்.

கேரளாவின் கோவளம் பகுதியில் உள்ள வாப்பா என்ற இஸ்லாமிய குரு, ஏ.ஆர்.ரஹ்மான் குடும்பத்தினருக்கும் குருவாக இருப்பவர். இவர்தான் திலீப் என்ற பெயர் கொண்டவரை அல்லா ரக்கா ரஹ்மான் எனப் பெயர் சூட்டி இஸ்லாமிய சமயத்தின்பால் ஈர்த்தவர்.

ஏ.ஆர்.ரஹ்மான் தாயாரின் மூலமாக வாப்பா என்ற மதகுருவைச் சந்திக்கச் சென்றிருக்கிறார் பாண்டு. “அடிக்கடி மலேசியா செல்லும் நீங்கள் ஒருமுறை புலாவ் பெசார் சென்று வாருங்கள்” என்று பாண்டுவிடம் கூறியிருக்கிறார் வாப்பா என்ற அந்த மதகுரு.

புலாவ் பெசாருக்கு வந்ததும் அதன் ஆன்மீக அமைப்பால் ஈர்க்கப்பட்ட பாண்டு, அங்கு தான் பெற்ற பிரசாதங்களான பேரிச்சம் பழம், கற்கண்டை ரஹ்மானின் தாயாருக்கு சென்று வழங்கியிருக்கிறார். அதைத் தொடர்ந்து பாண்டுவின் மூலம் புலாவ் பெசார் குறித்துக் கேள்விப்பட்ட ரஹ்மானின் தாயார் கரீமா பேகம், புலாவ் பெசார் தீவுக்கு வந்து சென்றார்.

புலாவ் பெசார் தீவுக்கு வந்திருந்த ரஹ்மானுடன் சில இரசிகர்கள் – (படம் நன்றி – பேஸ்புக்)

பலமுறை புலாவ் பெசார் வந்து சென்ற கரீமா பேகம், ரஹ்மானுக்கு ஆஸ்கார் விருதுகள் கிடைத்தபோது அதற்கானப் பிரார்த்தனையை நிறைவேற்றும் விதமாக புலாவ் பெசார் வந்து அன்னதானம் போன்ற வேண்டுதல்களை நிறைவேற்றியிருக்கிறார்.

தாயாரைத் தொடர்ந்து ரஹ்மானும் இங்கே ஆண்டுதோறும் பகிரங்கமாக அறிவிக்காமல் வந்து செல்கிறார் என்கிறார் நடிகர் பாண்டு.

2018-ஆம் ஆண்டில் ரஹ்மான் புலாவ் பெசார் வந்தபோது அவருடன் சில இரசிகர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இன்றும் முகநூல் பக்கங்களில் உலா வருகின்றன.

இப்படியாக, ரஹ்மானின் தாயார் தனது குடும்பத்திற்கும் மலேசியாவுக்கும்இடையில் புலாவ் பெசார் மூலமாக ஓர் ஆன்மீகப் பந்தத்தை உருவாக்கிவிட்டு சென்றிருக்கிறார். அந்த ஆன்மீகப் பந்தத்தை ஏ.ஆ.ரஹ்மானும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

-இரா.முத்தரசன்