கோலாலம்பூர்: ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங், இன்று அவசரகால பிரகடனத்தால் கட்சி அதிர்ச்சிக்குள்ளானதாகக் கூறினார்.
இரண்டு வார நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அறிவிக்கப்பட்ட ஒரு நாள் கழித்து, இது நடைமுறைக்கு வந்துள்ளதை அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொற்றுநோய் தாக்கத்தின் போது திடீர் தேர்தல்களைத் தவிர்க்க இது உதவும் என்று பிரதமர் நினைத்திருந்தால் இது நியாயமில்லை என்று அவர் கூறினார். புதிய தேர்தல்களுக்கான அழைப்பு அம்னோ முகாமில் இருந்து மட்டுமே வருவதாகவும், அவர்கள், 222 நாடாளுமன்ற இடங்களில் 39 இடங்களை மட்டுமே கொண்டுள்ளனர் என்றும் குவான் எங் கூறினார்.
“அம்னோ மட்டுமே இந்த கோரிக்கையை முன்வைக்கிறது. எதிர்க்கட்சியான நம்பிக்கை கூட்டணி மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் திடீர் பொதுத் தேர்தலுக்கான அழைப்பை எதிர்க்கின்றன. எனவே, இது அர்த்தமற்றது,” என்று அவர் கூறினார்.
தேசிய கூட்டணியின் அறிவிப்புகள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன என்றும், அதன் தலைமையிலான அரசாங்கத்திற்குள் மோசமான நிர்வாகமே இதற்குக் காரணம் என்றும் அவர் கூறினார்.
“கொள்கையை மீறுதல், இரட்டை தரநிலைகள் மற்றும் தேசிய கூட்டணி அரசாங்கத்தின் முழுமையான இயலாமை ஆகியவை கொவிட் -19 தொற்றுக்கு எதிரான போரில் மலேசியர்கள் தங்கள் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் இழக்க நேரிட்டது,” என்று அவர் கூறினார்.