இனிமேல் வாட்ஸ்எப் பயனர்கள் தங்களின் தரவுகளை பேஸ்புக் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை ஏற்றுக் கொள்ளாதவர்கள் எதிர்வரும் பிப்ரவரி 8-ஆம் தேதிக்குப் பின்னர் தங்களின் வாட்ஸ்எப் செயலியைப் பயன்படுத்த முடியாது.
இந்தப் புதிய நடைமுறை பயனர்களிடையே கடும் கண்டனங்களைத் தோற்றுவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து உலகின் முதல் நிலை பணக்காரராக உயர்ந்திருக்கும் டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலென் மஸ்க் வாட்ஸ்எப் தளத்திலிருந்து வெளியேறுமாறும் மற்ற குறுஞ்செயலிகளான சிக்னல் அல்லது டெலிகிராம் பயன்படுத்துமாறும் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த சில நாட்களில் இதன் காரணமாக சிக்னல், டெலிகிராம் இரண்டு குறுஞ்செயலிகளில் இணையும் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அமெரிக்க அரசாங்கம் பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமூக ஊடகத் துறையில் ஆதிக்கம் செலுத்துகிறது, ஆரோக்கியமான வணிகப் போட்டிகளை ஊக்குவிப்பதில்லை, சிறிய தொழில்நுட்பத் தொழில் முனைவர்களின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை போடுகிறது என்றெல்லாம் கூறி, பேஸ்புக் மீதான நெருக்குதல்களை அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
அப்படி இருந்தும் பேஸ்புக் தொடர்ந்து தனது ஆதிக்கத்தைச் செலுத்தும் வண்ணம் வாட்ஸ்எப் பயனர்கள் தங்களின் தரவுகளை பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற புதிய கட்டுப்பாட்டை பேஸ்புக் கொண்டு வந்திருக்கிறது.