Home கருத்தாய்வு தே.மு.தேர்தல் அறிக்கை: இந்தியர்களுக்கு இதையெல்லாம் நஜிப் கடந்த 4 வருடங்களில் செய்திருக்க முடியாதா?

தே.மு.தேர்தல் அறிக்கை: இந்தியர்களுக்கு இதையெல்லாம் நஜிப் கடந்த 4 வருடங்களில் செய்திருக்க முடியாதா?

727
0
SHARE
Ad

5D42CD286AB4CF9058652CBC42E79_h498_w598_m2ஏப்ரல் 17 – தேசிய முன்னணி வெளியிட்ட 13வது பொதுத் தேர்தல் கொள்கை அறிக்கையில் இந்தியர்களுக்கென பல சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதனைப் பாராட்டி ம.இ.கா தலைவர்களும் மற்றும் பலரும் தொடர்ந்து பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.

ஏற்கனவே, பக்காத்தான் ராயாட் என்ற மக்கள் கூட்டணி அனைத்து மலேசியர்களுக்கும் பொதுவான தங்களின் பொதுத் தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிட்டபோது அதில் இந்தியர்களுக்கென சிறப்பு கவனிப்பு எதுவும் இல்லை என பல ம.இ.கா தலைவர்கள் ஆவேச அறிக்கைகள் விடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து மக்கள் கூட்டணி கொள்கை அறிக்கையில் இந்தியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று ஹிண்ட்ராப்பும் அறிக்கை விடுத்தது.

ஆனால் இப்போது தேசிய முன்னணி விடுத்துள்ள தேர்தல் கொள்கை அறிக்கையில் இந்தியர்களுக்கென்று சில சிறப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

உடனே, இந்தியர்களின் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து விட்டது போன்று அனைவரும் அமைதியாகிவிட்டனர்.

ஆனால், சற்று ஆழமாக கவனித்துப் பார்த்தால் தேசிய முன்னணி தேர்தல் அறிக்கையில் இந்தியர்களுக்கு என்று கூறப்பட்டிருப்பவை எல்லாம் வெறும் வெற்று வாக்குறுதிகள் என்பதும் பல்லாண்டு காலமாக இந்தியர்களுக்கு திரும்பத் திரும்ப தேசிய முன்னணி வழங்கி வந்திருக்கும் அதே வாக்குறுதிகள்தான் புதிய வாசகங்களோடு புதுப்பிக்கப்பட்டுள்ளது என்பதும் புலப்படும்.

அதாவது புதிய மெத்தையில் பழைய பஞ்சு!

அன்வாருக்கும் நஜிப்புக்கும் உள்ள வேறுபாடு

அன்வார் அறிவிக்கும் தேர்தல் கொள்கை அறிக்கைக்கும், நஜிப் அறிவிக்கும் தேர்தல் கொள்கை அறிக்கைக்கும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு.

அன்வார் இன்னும் பிரதமராகவில்லை என்பதால், மத்திய அரசாங்கத்தை ஆண்டதில்லை என்பதால் அவர் தனது கொள்கை அறிக்கையில் வெறும் வாக்குறுதிகளைத்தான் வழங்க முடியும்.

தான் பிரதமரானால் – மக்கள் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தால் – நாங்கள் என்ன செய்வோம் என்றுதான் அவரால் கூற முடியும்.

ஆனால் நஜிப்பின் நிலைமை அப்படி அல்ல!

கடந்த நான்கு ஆண்டுகளாக அவர்தான் பிரதமர்!

அவர்தான் மத்திய அரசாங்கத்தை இயக்கிய சூத்திரதாரி.

இன்றைக்கு பாரிசானின் கொள்கை அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருக்கும் அம்சங்களை கடந்த நான்கு ஆண்டுகளில் அவரால் செய்திருக்க முடியாதா?

அல்லது அப்படி ஏதாவது செய்ய முயற்சியாவது எடுத்தாரா?

எதுவும் இல்லை!

மீண்டும் மீண்டும் வாக்குறுதிகள்தான் இந்திய சமுதாயத்திற்கென விதிக்கப்பட்ட சாபக் கேடாகி விட்டது.

தமிழ்ப் பள்ளிகளுக்கான உதவி இந்திய சமுதாயத்திற்கான சலுகையா?

தமிழ்ப் பள்ளிகளுக்கான உதவி என்பது ஏதோ இந்திய சமுதாயத்திற்கு தாங்கள் செய்யும் மிகப் பெரிய சலுகை என்பது போலவும், அதற்கு கைம்மாறாக இந்திய சமுதாயம் என்றென்றும் தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு வாக்களித்து கடன் பட்டிருக்க வேண்டும் என்பது போலவும்தான் தேசிய முன்னணி எப்போதும் நடந்து வந்திருக்கின்றது.

அதையேதான் தேசிய முன்னணியின் கொள்கை அறிக்கையும் பிரதிபலிக்கின்றது.

தமிழ்ப் பள்ளிகளுக்கு தாங்கள் வழங்கப் போகும் உதவிகளை முக்கிய அம்சமாக தேசிய முன்னணியின் கொள்கை அறிக்கை குறிப்பிடுகின்றது.

தமிழ்ப் பள்ளிகள் என்பது அரசாங்கத்தின் கடப்பாடு. மலேசியாவின் அரசியல் அமைப்பு ரீதியாக நமக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமை.

தமிழ்ப் பள்ளிகள்  கல்வி அமைச்சின் கீழ் வருவதால், அந்த பள்ளிகளில் கூரைகள் ஒழுகினாலோ, மோசமான நிலைமையில் இருந்தாலோ அவற்றை கவனித்து சீர் செய்ய வேண்டியது கல்வி அமைச்சின் கடமை.

அந்தப் பள்ளிகளுக்கு நிதிகள் வழங்குவது நமக்கு செய்யும் அரசியல் சலுகையாகவோ, உதவி போலவோ நாம் கருதக் கூடாது.

தமிழ்ப் பள்ளிகள் நமது உரிமை. எனவே, தமிழ்ப் பள்ளிகளுக்கு உதவி செய்வோம் என்பதே தேசிய முன்னணியின் தேர்தல் கொள்கை அறிக்கையில் இடம் பெறத்தக்க – இடம் பெற்றிருக்க வேண்டிய ஓர் அம்சம் அல்ல.

4 வருடங்களில் ஒரு பொருளாதாரத்திட்டம் கூட இந்தியர்களுக்கென நஜிப்பால் நிறைவேற்றியிருக்க முடியாதா?

அதே போன்றுதான், நமது பொருளாதார பலத்தை 3 சதவீதமாக உயர்த்துவோம் என்ற தேசிய முன்னணியின் மற்றொரு வாக்குறுதி.

கடந்த 4 ஆண்டுகளில் இந்தியர்களின் பொருளாதார பலத்தை உயர்த்துவதற்கு ஒரு திட்டம் கூட நஜிப்புக்கு கிடைக்கவில்லையா?

அதைக் கூட வாக்குறுதியாகத்தான் வழங்க வேண்டுமா?

சிறு தொழில் கடன்கள் என்ற பெயரில் நாடு முழுக்க விளக்கக் கூட்டம் நடத்தி – அதன் மூலம் கடன்கள் வழங்கி இந்தியர்களை மேலும் கடன்காரர்களாக ஆக்கியதுதான் தேசிய முன்னணி அரசு செய்த ஒரே காரியம்.

இந்தியர்களுக்கு இன்றைக்கு வேண்டியது உரிமைகள்! அரசாங்கத்தில் வர்த்தக உரிமங்கள்; சிறப்பு வாய்ப்புகள்; அரசாங்கக் குத்தகைகளில் பங்கெடுப்பு; சரி சமமான பொருளாதார வாய்ப்புகள்;

-இவையெல்லாம் முறையாக வழங்கப்பட்டால் – இனபேதமின்றி வழங்கப்பட்டால் அல்லது குறைந்த பட்சம் இன விகிதாச்சாரத்திற்கு ஏற்ப பிரித்து வழங்கப்பட்டால் – பொருளாதார ரீதியாக இந்தியர்கள் அவர்களாகவே உயர்ந்து விடுவார்கள்; அவர்களே அரசாங்கம் நிர்ணயிக்கும் 3 சதவீத பங்குடமை இலக்கை அடைந்து கொள்வார்கள்.

ஆனால் அதைச் செய்யாமல் 500 மில்லியன் ஆரம்பவித்து முதலீட்டு தொகையாக ஒதுக்கப்படும் என்று தேசிய முன்னணியின் கொள்கை அறிக்கை குறிப்பிடுகின்றது.

பொருளாதாரம் அறிந்தவர்களுக்கு புரியும். இந்த500 மில்லியன் ரிங்கிட்டை வைத்து இந்தியர்களின் பொருளாதாரத்தை 3 சதவீதமாக உயர்த்தவே முடியாது என்பது!

எனவே, தேசிய முன்னணி கொள்கை அறிக்கையில் இந்தியர்களுக்கு இதைச் செய்கின்றோம், அதைச் செய்கின்றோம் என சொல்லிவிட்டதால் மட்டும் இந்திய சமுதாயத்தின் நிலைமை மாறிவிடாது என்பதை இந்திய வக்காளர்கள் உணர வேண்டும்.

இன்றைக்கு கொள்கை அறிக்கையில் கூறுவதையெல்லாம் அல்லது அதில் ஒரு பகுதியை கடந்த 4 ஆண்டுகளில் பிரதமரின் அரசாங்கம் செய்து முடிப்பதற்கு நிறைய வாய்ப்பிருந்தது.

கடந்த நான்கு ஆண்டுகளாகப் பதவியில் இருந்துள்ளார் பிரதமர் நஜிப்.

அவர் நினைத்திருந்தால் இன்று கொள்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளஇந்த வாக்குறுதிகளை எல்லாம் மிகச் சுலபமாக, மிக குறுகிய காலகட்டத்திற்குள்முன்பே நிறைவேற்றியிருக்க இயலும்.

மாறாக ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி புரிந்து வரும் அரசாங்கத்தின் தலைவராக இருக்கும் அவர், இன்னமும் வாக்குறுதிகளை மட்டுமே அள்ளி வீசிவருகிறார்.

எனவே இந்திய வாக்காளர்கள் தேசிய முன்னணியின் தேர்தல் கொள்கை அறிக்கையைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

 –    இரா.முத்தரசன்