புதுடெல்லி,ஏப்ரல்.17 – மீதமுள்ள தண்டனையை அனுபவிக்க சிறை அதிகாரிகளிடம் சஞ்சய் தத் சரணடைய மேலும் 4 வார காலம் அவகாசத்தை சுப்ரீம்கோர்ட்டு அளித்துள்ளது. கடந்த 1993-ம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் குண்டுவெடித்த வழக்கில் பிரபல இந்தி நடிகர் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு சுப்ரீம்கோர்ட்டு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இதில் 18 மாதங்கள் சஞ்சய் தத் ஏற்கனவே சிறையில் இருந்துவிட்டதால் மீதமுள்ள மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்க சிறை அதிகாரிகளிடம் சரணடைய வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது.
சரணடைய தமக்கு கால அவகாசம் வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனையொட்டி அவருக்கு 4 வார கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் தாம் பல திரைப்படங்களில் நடித்துக்கொண்டியிருப்பதாகவும் இதில் பட தயாரிப்பாளர்கள் சுமார் ரூ.270 கோடி வரை முதலீடு செய்துள்ளனர் என்றும் தாம் தற்போது சரணடைந்தால் பெரும் பாதிப்பு ஏற்படும்.
அதனால் மேலும் 6 மாத காலம் கால அவகாசம் வேண்டும் என்று சஞ்சய் தத் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் பி.சதாசிவம், பி.எஸ்.செளகான் ஆகியோர் கொண்ட பெஞ்சில் நடந்தது. அப்போது சஞ்சய் தத்திற்கு மனிதாபிமான அடிப்படையில் மேலும் 4 வார கால அவகாசம் கொடுக்கப்பட்டது.
ஆனால் இதுதான் கடைசி என்றும் இதற்குமேல் கால அவகாசம் கொடுக்க முடியாது என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக கூறிவிட்டனர். இந்த 4 வார காலம் முடிந்தவுடன் சஞ்சய் தத், மீதமுள்ள மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்க சிறை அதிகாரிகளிடம் சரணடைந்துவிட வேண்டும் என்றும் நீதிபதிகள் கண்டிப்புடன் கூறினர்.