கோலாலம்பூர்: தைப்பூசத்தை முன்னிட்டு கெடாவில் வழங்கப்பட்ட பொது விடுமுறையை கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் இரத்து செய்ததை முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் விமர்சித்துள்ளார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கொண்டாட்டங்களை நிறுத்தியிருக்கலாம், ஆனால் இந்துக்கள் அதை இன்னும் கடைப்பிடிக்க இருப்பதால், கெடா அரசாங்கத்தால் தைப்பூச விடுமுறை இரத்து செய்யப்படுவது அவசியமற்றது என்று அவர் கூறினார்.
இந்த ஆண்டு மாநிலத்தில் தைப்பூசத்திற்கு பொது விடுமுறை இருக்காது என்று நேற்று முகமட் சனுசி அறிவிப்புக்கு நஜிப் பதிலளித்தார்.
“மலேசியாவில் இந்துக்களுக்கான மிக முக்கியமான திருவிழாக்களில் தைப்பூசம் ஒன்றாகும். பல மாநிலங்கள் பல தசாப்தங்களாக பொது விடுமுறை அறிவித்துள்ளன. இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையால் பாதிக்கப்பட்டிருந்தாலும், பொது விடுமுறையை இரத்து செய்ய வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் இந்து குடும்பங்கள் இதை வீட்டிலேயே கொண்டாட முடியும். இந்த பாரம்பரியத்தை கடைப்பிடிப்போம்,” என்று அவர் கூறியுள்ளார்.
இந்த முடிவு தொடர்பாக அரசியல்வாதிகள், சமூகங்களிடமிருந்து பெரும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. மனிதவள அமைச்சர் எம்.சரவணம் மற்றும் பினாங்கு மாநில துணை முதல்வரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.