Selliyal | “Master” – movie review & box office collections – 16 January 2021
செல்லியல் காணொலி | மாஸ்டர் : படம் எப்படி? வசூல் எப்படி? | 16 ஜனவரி 2021
கடந்த ஜனவரி 16-ஆம் தேதி செல்லியல் யூடியூப் காணொலித் தளத்தில் இடம் பெற்ற மேற்கண்ட செல்லியல் காணொலியின் கட்டுரை வடிவம் :
பெரும் எதிர்பார்ப்புடன் தமிழகத்தின் திரையரங்குகளில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் 5 மொழிகளில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகியிருக்கிறது மாஸ்டர் தமிழ்ப் படம்.
தமிழ் தவிர்த்து இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகியிருக்கிறது. இந்தியில் மட்டும் சுமார் 1,200 திரையரங்குகளில் வட இந்தியாவில் திரையிடப்பட்டிருக்கிறது.
ஆனால், மலேசியாவில் இந்த படம் திரையிடப்படவில்லை. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதால் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு மலேசிய இரசிகர்களுக்கு கிடைக்கவில்லை.
ஜனவரி 13-ஆம் தேதி முதல் மாஸ்டர் படம் உலக அளவில் வெளியீடு கண்டது. அதே நாளில்தான் மலேசியாவில் பல மாநிலங்களில் முழுமையானக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இரண்டு வார கால கட்டுப்பாட்டு ஆணை ஜனவரி 26-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முடிவடைந்தவுடன் மேலும் இரண்டு வாரங்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்பட்டால் மாஸ்டர் திரைப்படம் மலேசியாவில் திரையரங்குகளில் எப்போது வெளியிடப்படும் என்பது கேள்விக்குறியாகிவிடும்.
அடுத்த ஒரு மாதத்திற்குள் இந்த படம் மலேசியத் திரையரங்குகளில் திரையிடப்பட வாய்ப்பில்லை. இந்நிலையில் தற்போதுள்ள நடைமுறைப்படி திரையரங்குகளில் வெளியிடப்பட்ட ஒரு மாதத்திலேயே திரைப்படங்கள் ஓ.டி.டி. எனப்படும் கட்டண வலைத் திரையில் திரையிடப்பட்டு விடும்.
எனவே, பெரும்பாலான மலேசிய இரசிகர்கள் கட்டண வலைத் திரைகள் அல்லது ஆஸ்ட்ரோ அலைவரிசைகள் வழியாகத்தான் மாஸ்டர் படத்தைப் பார்க்க முடியும்.
சரி! படம் எப்படி இருக்கிறது? தமிழக இரசிகர்கள் மூலம் கிடைத்த சில தகவல்கள்!
மாஸ்டர் படம் எப்படியிருக்கிறது?
படத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு விஜய் சேதுபதி – விஜய் இருவரும் இந்த படத்தில் இணைந்து இருப்பது.
படத்தில் வில்லனாக வரும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் மிகச் சிறந்த முறையில் செதுக்கப்பட்டிருக்கிறது. நடிப்பில் விஜய் சேதுபதி, விஜயை விட சிறப்பாக படத்தில் வெளிப்பட்டிருக்கிறார் என சில இரசிகர்கள் தெரிவித்தனர்.
படத்தில் விஜய் கதாபாத்திரத்தின் பின்புலம் கவரும்படி அமைக்கப்படவில்லை என்றும் சில இரசிகர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் சினிமா விமர்சகர் டாக்டர் தனஞ்செயன், விஜய் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார் என்கிறார். கத்தி படத்திற்குப் பிறகு விஜய் வழங்கியிருக்கும் சிறப்பான நடிப்பு இந்தப் படத்தில்தான் என்கிறார் அவர்.
சினிமா விமர்சகர்கள் கண்ணோட்டத்தின்படி படம் சுமார்தான்! எதிர்பார்த்தபடி இல்லை என்பது பொதுவான பார்வை.
இருப்பினும் விஜய் இரசிகர்களை ஏமாற்றாமல், இத்தனை மாதங்கள் காத்திருந்ததற்கு ஏற்ப அவர்களைத் திருப்திப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்பது இன்னொரு பார்வை.
அதிரடி சண்டைக் காட்சிகள், விஜய்-விஜய் சேதுபதி மோதல், அனிருத்தின் சிறப்பான பாடல்கள், அபாரமான பின்னணி இசை என அனைத்து அம்சங்களிலும் இரசிகர்களைப் பெருமளவில் கவர்ந்திருக்கிறது மாஸ்டர் என விமர்சனங்கள் வரத் தொடங்கியிருக்கின்றன.
வசூல் எப்படி?
படம் எப்படி இருக்கிறது என்பது ஒருபுறமிருக்க படத்தின் வசூல் எப்படி?
தமிழகத்தின் திரை அரங்குகளில் 50 விழுக்காடு இடங்களுக்கு மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பாடுடன் படம் வெளியாகியிருக்கிறது.
இருப்பினும், கொவிட்-19 தொற்று அச்சத்தையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, முண்டியடித்துக் கொண்டு இரசிகர்கள் முன்கூட்டியே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருக்கின்றனர்.
50 விழுக்காடு டிக்கட்டுகளுக்கு மட்டுமே அனுமதி என்ற நிலையில் தமிழ் நாட்டில் மட்டும் 250 மில்லியன் ரூபாய்க்கும் (25 கோடி) மேல் முதல் நாளிலேயே வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது மாஸ்டர்.
இந்த வார இறுதிக்குள் படத்தின் வசூல் அடிப்படையில் அனைத்து விநியோகஸ்தர்களும் தங்களின் முதலீட்டை திரும்ப ஈட்டி விடுவர். அதன் பிறகு அவர்களுக்கு கிடைப்பதெல்லாம் இலாபம்தான் எனக் கூறுகிறார் தமிழக சினிமா தயாரிப்பாளரும், தமிழ் சினிமா குறித்தத் தகவல் களஞ்சியமாகத் திகழ்பவருமான டாக்டர் ஜி.தனஞ்செயன்.
தனது சினிமா சென்ட்ரல் யூடியூப் தளத்தின் வழி தனஞ்செயன் மாஸ்டர் படத்தின் சில வசூல் விவரங்களைத் தெரிவித்திருக்கிறார்.
அதன்படி, படம் வெளியிடப்பட்ட எல்லா மொழிகளிலும் முதல் சில நாட்களிலேயே வெற்றிகரமாக வசூல் மழையைக் குவித்திருக்கிறது மாஸ்டர் என்கிறார் தனஞ்செயன்.
முதல் 5 நாட்களிலேயே மாஸ்டர் படம் 1000 மில்லியன் ரூபாய் (100 கோடி) இந்தியா முழுவதும் வசூல் செய்து விடும் எனக் கூறுகிறார் தனஞ்செயன்.
இதுவரையில் வசூல் சாதனை என்று பார்த்தால் விஜய்யின் சர்க்கார் படம்தான் 320 மில்லியன் ரூபாய், முதல் நாள் வசூல் செய்து முதல் நிலையில் இருந்து வருகிறது.
ஆனால், தற்போது 50 விழுக்காடு மட்டுமே அனுமதி என்ற நிலையிலும் முதல் நாளே 250 மில்லியன் ரூபாய் வசூல் என்ற முறையில் மீண்டும் நான்தான் வசூல் சக்கரவர்த்தி என நிரூபித்திருக்கிறார் விஜய்.
50 விழுக்காட்டு கட்டுப்பாடின்றி படம் திரையிடப்பட்டிருந்தால் மாஸ்டர் படமே தமிழ் நாட்டில் முதல் நிலை வசூல் சாதனையைப் புரிந்திருக்கும் என கணிக்கப்படுகிறது.
அந்த வகையில், கொவிட்-19 தொற்றுகளால் திரையரங்குகள் மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்புமா? தமிழ் திரைப்பட உலகம் மீட்சி பெறுமா? என்ற சந்தேகக் கேள்விகளை முறியடித்து தமிழ் சினிமா குறித்த அனைத்து வணிகத் தரப்பினரின் வயிற்றிலும் பால்வார்த்திருக்கிறது மாஸ்டர்.
எத்தனையோ பிரச்சனைகள், நெருக்கடிகளுக்கு இடையிலும் சுமார் 10 மாதங்கள் காத்திருந்து, இந்தியா முழுவதுமுள்ள அனைத்து சினிமா வணிகத் தரப்புகளுக்கும் இலாபமும், மகிழ்ச்சியும் ஏற்படுத்திய வகையில் விஜய்க்கும் படத் தயாரிப்பாளருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஆகக் கடைசியான தகவல்களின்படி முதல் 7 நாட்களிலேயே தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி அதாவது 1,000 மில்லியன் ரூபாய் வசூலை வாரிக் குவித்திருக்கிறது மாஸ்டர்.