கோலாலம்பூர்: அமானாவைச் சேர்ந்த மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் மஇகாவை நம்பிக்கை கூட்டணியில் இணைய அழைத்துள்ளார்.
கெடாவில் தைப்பூசக் கொண்டாட்டங்களுக்கு வழங்கப்பட்ட விடுமுறை திரும்பப் பெற்றது தொடர்பாக டுரியான் துங்கால் சட்டமன்ற உறுப்பினர் முகமட் சோபி அப்துல் வாஹாப் இதனைத் தெரிவித்தார்.
“மஇகாவை நம்பிக்கை கூட்டணியில் சேர நான் அழைக்கிறேன், ஏனென்றால் இனம் மற்றும் மதத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து இனங்களுக்கும் நம்பிக்கை கூட்டணி முக்கியமளிப்பது தெளிவாகிறது. எனவே எஸ். ஏ. விக்னேஸ்வரன், அரசியல் போராட்டத்தில் மற்ற இனங்களையும் மதங்களையும் மதிக்காத மந்திரி பெசார் மூலம் பாஸ் அணுகுமுறையை அறிந்திருந்தால், அக்கட்சி நம்பிக்கை கூட்டணியில் சேர வேண்டிய நேரம் இது,” என்று அவர் கூறினார்.
கடுமையான நிபந்தனைகளின் கீழ் மத நிகழ்வுகள் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், இந்த ஆண்டு சனுசி தைப்பூச விழுமுறையை இரத்து செய்ததால், இரு கட்சிகளுக்கும் இடையே சர்ச்சைகள் எழுந்தன.
தைப்பூசத்திற்கு கெடாவில் 2014 முதல் விடுமுறை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
விடுப்பை திரும்பப் பெறுவதற்கான முடிவை மஇகா தலைவர்கள் , நம்பிக்கை கூட்டணி மற்றும் முன்னாள் அம்னோ தலைவர் நஜிப் ரசாக் ஆகியோரும் விமர்சித்தனர். விமர்சனங்களுக்கு பதிலளித்த சனுசி, இந்த நடவடிக்கை இந்துக்களை ஓரங்கட்டும் நோக்கம் கொண்டதல்ல என்றார்.
இதற்கிடையில், மஇகாவை ஒரு கூறு கட்சியாக ஏற்றுக்கொள்வதில் நம்பிக்கை கூட்டணி மகிழ்ச்சியடையும் என்றும் முகமட் சோபி கூறினார்.
“நம்பிக்கை கூட்டணி தலைமையில், மஇகா போன்ற பெரிய கட்சியை ஓர் அங்கமாக ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளது என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் தேசத்திற்காக நம்பிக்கை கூட்டணி போராடுகிறது. அமானா இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், நாங்கள் ஒரே மதம் மற்றும் இனத்தை மட்டும் கொண்டு போராட்டத்தின் அடித்தளத்தை அமைக்கவில்லை, ” என்று அவர் மேலும் கூறினார்.