Home One Line P1 “இதுவும் கடந்துபோகும் என்ற நம்பிக்கையோடு பொறுமை காப்போம்” – சரவணன் தைப்பூச வாழ்த்து

“இதுவும் கடந்துபோகும் என்ற நம்பிக்கையோடு பொறுமை காப்போம்” – சரவணன் தைப்பூச வாழ்த்து

443
0
SHARE
Ad

மனிதவள அமைச்சரும், ம.இ.கா தேசியத் துணைத்தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் தைப்பூச தின வாழ்த்துச்செய்தி

 

யாருக்கும் முன்னவனே முன்னின்றால் முடியாத செயலுண்டோ…

பொதுமக்களின் நலனை முன்னிறுத்தி அரசாங்கம் மேற்கொண்டுள்ள இந்த நடமாட்டக் கட்டுப்பாடு காலகட்டத்தில் வரும் தைப்பூசத்திருநாளை நாம் இல்லத்தில் இருந்தபடியே இறைவனருள் வேண்டி முருகனைப் பிரார்த்திப்போம். இதுவும் கடந்துபோகும் என்ற நம்பிக்கையோடு பொறுமை காப்போம். நடமாட்டக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து விரைவாக இந்த கொரோனாவை விரட்டி அடிப்போம் என்று இந்நன்னாளில் உறுதிகொள்வோம்.

#TamilSchoolmychoice

தைப்பூசத் திருவிழா பக்திப் பரவசத்துடன் பக்தர்கள் முருகனை, அழகனைக் கொண்டாடி மகிழும் ஒரு திருநாளாகும். ஆண்டுதோறும் காவடிகள், பால்குடங்கள், முடிகாணிக்கை, அன்னதானம், தண்ணீர் பந்தல், பக்தர்கள் கூட்டம், இரத ஊர்வலம், சந்தைகள் என கோலாகலமாக முருகனை வேண்டி பக்தர்கள் கூட்டம் பவனிவருவதை நாம் பார்த்துள்ளோம்.

இந்த வருடம் அதற்கான சாத்தியம் இல்லை, நேர்த்திக்கடன் செலுத்த இயலாது, காணிக்கைகள் இல்லை, கடைகள் இல்லை, இரத ஊர்வலம் இல்லை, பக்திப் பரவசம் இல்லை. ஆனால் இது காலத்தின் கட்டாயம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. கொரோனா எனும் கண்ணுக்குத் தெரியாத கிருமி கடந்த ஒருவருட காலமாக நம்மை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.

கடந்த வருடம் கூட, தைப்பூசத்தின் போது கொரோனா தொற்று காரணமாக வழக்கமான நடவடிக்கைகளோடு, கூடுதல் சுகாதார முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டன. பக்தர்கள் அனைவரும் தனிப்பட்ட வகையில் தங்களது சுகாதாரத்தைப் பேண வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு எந்தவித தங்குதடையுமின்றி தைப்பூசவிழா நடைபெற்றது.

அதுதான் கொரோனாவின் துவக்க நிலை. அன்றைய சூழலில் 10-14 கொரோனா தொற்று மட்டுமே காணப்பட்டது.

ஆனால் இன்றைய நிலை வேறு. இந்த அனைத்துலகப் பரவல் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது. தினம் தினம் ஆயிரமாயிரம் தொற்றுகள் எண்ணிக்கையில் கூடிக்கொண்டே போகின்றன. இந்த சூழலில் அவசரகால பிரகடனம் தவிர வேறு வழியில்லை. ஒட்டுமொத்தமாக அனைத்து மக்களும் கட்டுப்பாட்டோடு வீட்டில் இருந்து, முழுமூச்சாக இந்த கொரோனா சங்கிலித்தொடரைத் தகர்க்க வேண்டும்.
இதனையே தைப்பூச சவாலாக ஏற்போம்.

புறத்தே காணும் ஜோதியை, அகத்தே காண்பதே பேரின்பம் என்பது சித்தர்களின் கூற்று. அதற்கொப்ப இந்த வருடம் முருகனின் அருளும் ஆசியும் பூரணமாய் பெற இல்லத்தில் இருந்தபடியே நமது பிரார்த்தனையை மேற்கொள்வோம். நேர்த்திக்கடன் செலுத்த முடியவில்லையே எனும் வருத்தம் வேண்டாம். அனைத்தும் பூர்த்தியாகும் காலம்வரும். அதுவரை காத்திருப்போம், கந்தனருள் வேண்டிநிற்போம்.

ஆறெழுத்து மந்திரத்தைத் தந்ததொரு சுந்தரத்தை
அந்திபகல் சிந்தனைசெய் நெஞ்சமே-அந்த
ஆறெழுந்து மந்திரத்தை யாரெடுத்து ஓதினாலும்
ஆறுமுகம் வந்துநிற்கும் முன்னமே

சமய நெறிகளுடன் தைப்பூசத்தைக் கொண்டாடுவோம்..