சென்னை : இங்குள்ள மெரினா கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள, மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் நினைவிடம் நேற்று புதன்கிழமை (ஜனவரி 27) கோலாகலமான திறப்பு விழா கண்டது.
இந்த நினைவிடத் திறப்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றியதோடு, நினைவிடத்தையும் திறந்து வைத்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் நூறாயிரம் பேர் ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு, திறப்பு விழாவிற்குப் பின்னர் ஜெயலலிதா நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினர்.
இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஒருவர் மரணமடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா சிறையிலிருந்து விடுதலையான அதே நாளில் ஜெயலலிதா நினைவிடமும் திறப்பு விழா கண்டிருக்கிறது. சசிகலா விடுதலைக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுப்பதைத் தவிர்க்கவே, அதிமுக தலைமை ஜெயலலிதா நினைவிடத்தை அதே நாளில் திறந்திருக்கிறது என்றும் ஊடகங்கள் தெரிவித்தன.
ஜெயலலிதாவின் நினைவிடம் குறித்து தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கவிதை வரிகளில் பின்வருமாறு தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார்:
மாண்புமிகு அம்மா நினைவிடம்,
உண்மை ஒளி வீசும் இடம்!
நேர்மை ஒளி வீசும் இடம்!
வாய்மையும், சத்தியமும் ஒளி வீசும் இடம்!
சாதனைகள் ஒளி வீசும் இடம்!
தமிழகத்தில் தீயசக்திகள் தலையெடுத்து விடாமல் தடுப்பதற்காக நாளும், நாளும் உழைக்க வேண்டுமென விசுவாச தொண்டர்களுக்கு பாடம் எடுக்கும் இடம்!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அனைவருக்கும் நன்றி தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டார் :
“மாண்புமிகு அம்மா அவர்களின் பிரம்மாண்ட பீனிக்ஸ் வடிவிலான நினைவிட திறப்பு விழாவில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து இலட்சக்கணக்கில் வருகை தந்து கலந்து கொண்ட கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி”