சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 113,000- க்கும் மேற்பட்ட நபர்கள் பிபைசர்-பயோஎன்டெக் கொவிட் -19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். மேலும் 50- க்கும் மேற்பட்டோர் தங்களது இரண்டாவது தடுப்பூசியை பெற்று, முழு தடுப்பூசி முறையையும் புதன்கிழமை நிலவரப்படி பூர்த்தி செய்துள்ளனர்.
மொத்தம் 432 பாதகமான நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. இதில் மூன்று அனாபிலாக்ஸிஸ் எனப்படும் கடுமையான ஒவ்வாமை எதிர்விளைவுகள் சம்பந்தமான சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
“அனாபிலாக்ஸிஸ் என்பது பிபைசர்-பயோஎன்டெக் கொவிட் -19 தடுப்பூசியினால் ஏற்படும் அரிதான பக்க விளைவு” என்று சுகாதார அமைச்சின் இயக்குநர் கென்னத் மேக் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
அனைத்து தடுப்பூசிகளையும் போலவே, தடுப்பூசியால், கடுமையான ஒவ்வாமை எதிர்விளைவுகளை ஒரு சிறிய விகிதத்தில் மக்கள் அனுபவிப்பர் என்று மேக் கூறினார்.
“தடுப்பூசி திட்டத்தை மேற்கொள்ள முடியும் என்பதை உறுதி செய்வதற்காக, தடுப்பூசிக்கு முந்தைய மற்றும் பிந்தைய பரிசோதனை, கண்காணிப்பு போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டோம். அனாபிலாக்ஸிஸின் மூன்று நிகழ்வுகளும் உடனடியாக சிகிச்சையளிக்கப்பட்டன. அவர்கள் நலமாக உள்ளனர்,” என்று அவர் கூறினார்.
மூன்று நபர்களும், சொறி, மூச்சுத் திணறல், உதடு வீக்கம், தொண்டை இறுக்கம் மற்றும் பயம் போன்ற பல அறிகுறிகளைக் கொண்டிருந்தனர்.