Home One Line P2 ஆஸ்ட்ரோ : “பிறவி சித்தம்” – மலேசியச் சித்தர்களைப் பற்றிய சுவாரசியமான ஆவணப்படம்

ஆஸ்ட்ரோ : “பிறவி சித்தம்” – மலேசியச் சித்தர்களைப் பற்றிய சுவாரசியமான ஆவணப்படம்

844
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ஆஸ்ட்ரோவின் வானவில் (அலைவரிசை 201) அலைவரிசையில் “பிறவி சித்தம்” என்ற மலேசியச் சித்தர்களைப் பற்றிய சுவாரசியமான ஆவணப்படம்
ஒளியேறி பரவலான வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்து மதத்தின் விசித்திரமான மற்றும் ஆன்மீக அம்சங்களைக் கொண்ட, குறிப்பாக உள்ளூர் சித்தர்களைச் சித்தரிக்கும் பிறவி சித்தம் எனும் இந்தப் புதிய உள்ளூர் தமிழ் ஆவணப்படத்தை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம்.

இயக்குநர், சிலியன் எஸ் பெருமாள் மற்றும் தொகுப்பாளர்கள், அருள்செல்வன் செல்வசாமி & மீனா குமாரி கடியன்பன் அவர்களின் அற்புதமான அனுபவங்களைப் பகிர்ந்துக் கொள்கின்றனர்:

#TamilSchoolmychoice

சிலியன் எஸ் பெருமாள் : மலேசியாவில் உள்ள சித்தர்கள் மற்றும் அவர்கள் சார்ந்தக் கோயில்களைப் பற்றிய கதைகளைச் சொல்ல எனக்கு உத்வேகம் ஏற்பட்டது. இந்த ஆவணப்படம் இந்து மதத்தில் தீர்க்கப்படாத மர்மங்கள் மற்றும் ‘ஜீவ சமாதி’ அல்லது ‘முக்தி நிலை’ உள்ளிட்ட ஆன்மீக நிகழ்வுகளைச் சித்தரிக்கின்றது. ஒரு சித்தரின் சிறப்புகள், தனித்துவம், வரலாறு மற்றும் அவருடன் தொடர்புடைய ஒரு கோயில் ஆகியவை ஒவ்வொரு அத்தியாயத்திலும் இடம்பெறும்.

சில காட்சிகள் அனிமேஷன் அல்லது மறு உருவாக்கக் காட்சி மூலம் சித்தரிக்கப்படும். சித்தரின் வாழ்க்கை முறையைப் பற்றியும் இரசிகர்கள் அறிந்துக் கொள்ளலாம். இந்த ஆவணப்படத் தயாரிப்பிற்கு முழு ஆதரவு அளித்த ஆஸ்ட்ரோவுக்கும் மற்றும் மாஸ்டர் சிவபாரதிக்கும் இவ்வேளையில் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். மேலும், இரசிகர்கள் இந்த மெய்நிகர் அனுபவத்தை அனுபவித்து மகிழ்வதோடு ஞானத்தையும் ஆன்மீக ஆற்றலையும் உள்நாட்டில் தேட முடியும் என்பதை அறிந்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

அருள் செல்வன்

அருள்செல்வன்: தைப்பிங் புக்கிட் மேக்ஸ்வெல் முருகன் கோவிலில் நடந்தப் படப்பிடிப்புகள் மறக்க முடியாதவை. இத்திருத்தலம் காடுகளுக்கு மத்தியில் அமைந்திருந்தது. இரவில் நடத்தப்பட்டப் படப்பிடிப்புகள் ஒரு தெய்வீக உணர்வை வழங்கியதோடு இயற்கையின் கூறுகளுடன் தொடர்பையும் உருவாக்கியது.

எனக்கு ஏற்பட்ட உருமாற்ற அனுபவத்தை வார்த்தைகளால் விளக்குவது கடினம். ஏனெனில் அது உடல் ரீதியானது அல்ல. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சுங்கை கெச்சில் பழனிசாமி ஆசிரமத்தில் மலேசியா முழுவதிலுமிருந்து வாசி யோகிகள் தியானிக்க இங்கு ஒன்றுக் கூடுவர். எனவே, அதன் அனுபவமும் மறக்க முடியாத தருணமாகும். மூலிகைகளைப் பயன்படுத்தி மருத்துவ மதிப்புள்ள உணவைப் தயாரிக்க குழுவினர் அதிகாலை 4 மணியளவில் எழுந்திருக்க வேண்டியிருந்தது. நாங்கள் உடற்பயிற்சியைத் தொடர்ந்தோம். இதன் விளைவாக நாள் முழுவதும் நான் துடிப்புடன் இருந்ததோடு ஆசீர்வதிக்கப்பட்டதைப்போல் உணர்ந்தேன்.

வாசி யோகம் பயிற்சி செய்ய நூற்றுக்கணக்கான யோகிகள் கூடும் அமைதியான இடங்களைப் பற்றி அறிந்துக் கொள்வது ஆச்சரியமாக இருந்தது. இந்த அனுபவம் எனக்கு ஆன்மீகமானது. இந்த ஆவணப்படத்தின் மூலம், மலேசியாவிலும் ‘ஜீவசமாதி’ அல்லது ‘மகாசமாதி’ அடைந்த பல “சித்தர்கள்” அல்லது “சித்தர் மார்க்கம்” இருக்கும் விழிப்புணர்வை பரப்புவதோடு “ஞான மார்க்கம்” போன்றவற்றை பின்பற்றவும் ஊக்குவிக்கிறோம் என்று நம்புகிறேன்.

மீனாகுமாரி

மீனா: நாங்கள் பதில்களற்றப் பல கேள்விகளுடன் இந்நிகழ்ச்சியின் படப்பிடிப்பைத் தொடங்கினோம். ஆனால், நாங்கள் படப்பிடிப்பைப் தொடரும்போது, அந்த சித்தர்களே வழிநடத்திச் சென்றதுப் போல அனைத்தும் சீராக நடைபெற்றன. ஆங்கிலேய ஆட்சியில் தோற்றுவிக்கப்பட்ட பல ஆலயங்களின் அற்புதங்கள் பிரமிக்கச் செய்தன.

கந்தான் காளி கோயிலிலிருந்து, சுங்கை சிப்புட் சிவ சண்முகர் ஆலயம் வரை பயணிக்கும் 12 அடி வெள்ளை நாகத்தின் செயல் மெய்சிலிர்க்க வைத்தது. சித்தர்கள் வழிபட்ட பஞ்சலிங்கங்கள் முதற்கொண்டு அகத்திய முனிவர் ஏற்றி வைத்த அணையா தீபம் வரை அனைத்தும் ஆச்சரியத்தின் உச்சக்கட்டம். இம்மறக்க முடியாத தருணங்களைப் பெற்றதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். நமது வரலாற்றை திரும்பி பார்க்க வைத்த அனைத்து தருணங்களும் மறக்க இயலாத பொக்கிஷங்கள்.

மேலும், அழகான நமது கலாச்சாரமும் தொடரும் என்று நம்புகிறேன். இந்த நிகழ்ச்சி கலை, கலாச்சாரம் மற்றும் வழிபாடு குறித்த நமது நம்பிக்கைகளை அதிகரிக்கும் என்று நம்புகிறேன். பிறவி சித்தம், நம் கலையின் மீதும் தொன்று தொட்டு வரும் கலாச்சாரத்தின் மீதும் இறை வழிப்பாட்டின் மீதும் மேலும் நம்பிக்கையை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. சித்தர்கள் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மதிப்புமிக்க வாழ்க்கைத் தத்துவங்களை நமக்குப் போதித்துள்ளனர். இந்த நிகழ்ச்சி இன்னும் பல பதிலளிக்கப்படாத சந்தேகங்களுக்குப் பதிலளிக்கும் என்று நம்புகிறேன்.

இந்து மதத்தின் விசித்திரமான மற்றும் ஆன்மீக அம்சங்களைக் கொண்ட, குறிப்பாக உள்ளூர் சித்தர்களைப் பற்றிய விபரங்களைப் பிறவி சித்தம் சித்தரிக்கின்றது.

அதுமட்டுமின்றி, பாரம்பரிய மருத்துவத்தின் நன்மைகள், யோகாசனம், சுவாசப் பயிற்சிகள், சைவ உணவு முறைகள் மற்றும் அதன் நன்மைகள், மற்றும் ‘ஜீவ சமாதி’ அல்லது ‘முக்தி நிலையைக்’ கொண்ட எட்டுத் தளங்கள் ஆகியவை இந்த ஆவணப்படத்தில் இடம்பெறும்.

அவை யாதெனில், பேராக்கில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெகநாதர் சிவாலய ஆசிரமம் மற்றும் காசிவாசி கண்டைய சுவாமி சமாதி; பினாங்கில் அமைந்துள்ள சித்தர் பழனிசாமி தியான மையம், பிரம்ம ஸ்ரீ சுவாமி சரஹன பவனந்த சமாதி, ஸ்ரீ ரங்கநாத சுவாமி மதாலயம் மற்றும் கந்தசாமி கோயில்; மற்றும் கெடாவில் அமைந்துள்ள ஸ்ரீ சிவபித்து குருமாதா (அம்மா) மற்றும் சுவாமி சந்தானந்த சித்தர்.

பிறவி சித்தம் ஆவணப்படத்தை ஒவ்வொரு சனிக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201), ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்டில் கண்டு மகிழலாம்.