ஜோகூர் பாரு: கொவிட் -19 பாதிப்பின் காரணமாக, ஜோகூரில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில், பைதுல் சொலெஹா காப்பகத்தில் தங்கியிருந்த 22 குழந்தைகள் உட்பட மொத்தம் 61 பேர் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டனர்.
ஜனவரி 30- ஆம் தேதி கொவிட் -19 தொற்றுக்கு 38 பேர் அங்கு ஆளாகி இருந்தனர். அவர்களில் ஏழு பேர் குலுவாங் மருத்துவமனையிலும், மீதமுள்ளவர்கள் ஜோகூர் பாருவில் உள்ள மருத்துவமனையிலும் உள்ளனர்.
“இப்போது இங்கே மிகவும் அமைதியாக இருக்கிறது. இப்போது இங்கே ஒன்பது தாய்மார்கள் மற்றும் எட்டு குழந்தைகள் மட்டுமே உள்ளனர். மேலும் அவர்கள் (கொவிட் -19) பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருக்கிறார்கள்,” என்று மாக் லிசா என்று அறியப்படும் காப்பக நிறுவனர் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
“அவர்கள் அனைவரையும் அழைத்துச் செல்வதைப் பார்ப்பது எனக்கு வேதனையாக இருக்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையில், வீட்டில் கொவிட் -19 தொற்றைத் தடுப்பதற்காக தங்குமிடத்தில் கடுமையான நடைமுறைகளுடன் எப்போதும் கண்டிப்பாக இருந்ததாகவும், ஆனால் பாதிப்பைத் தடுக்க இது போதாது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டி உள்ளதாகவும் மாக் லிசா கூறினார்.