கோலாலம்பூர்: தேசிய கூட்டணி அமைச்சர்களின் தவறுகளால், மலேசியர்கள் வேலைகளையும், தொழில்களையும் இழந்து வருகிறார்கள். இந்த விவகாரத்திற்கு பொறுப்பானவர்கள் பதவி விலக வேண்டும் என்று ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் கூறியுள்ளார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிப்ரவரி 18 வரை நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொருளாதாரத்தை மீட்பதற்கான எந்தவொரு உறுதியான மற்றும் கணிசமான நிதி தொகுப்பையும் அறிவிக்கத் தவறியதன் மூலம் தேசிய கூட்டணி அரசாங்கம் மலேசியர்களை கைவிட்டுள்ளது என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடக்கப்பட்டு, வேலைகள் மற்றும் வணிகங்களை காப்பாற்றுவதற்கான முழுமையான அர்ப்பணிப்பு இல்லாததை அவர் சுட்டிக் காட்டினார்.
“தங்கள் வேலைகளைச் செய்யத் தவறிய அமைச்சர்களை மாற்ற வேண்டும். சுகாதாரம், சுற்றுலா, மக்கள் நலன், மனிதவளம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றிற்கு பொறுப்பான அமைச்சர்கள் வேலைகள் மற்றும் வணிகங்களை காப்பாற்றத் தவறியதற்காக பதவி விலக வேண்டும்,” என்று அவர் கூறினார்.
பிரதமர் மொகிதின் யாசின் தோல்விக்கு பொறுப்பேற்காமல், நாடாளுமன்றத்தை இடைநீக்கம் செய்வதன் மூலம் தனது அரசியல் பிழைப்புக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் அவர் விமர்சித்தார்.