கோலாலம்பூர்: ஒரு நாள் அதிகாரப்பூர்வ சந்திப்பிற்காக பிரதமர் மொகிதின் யாசின் நாளை இந்தோனிசியா செல்வார் என்று வெளியுறவு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
24 மணி நேரத்திற்கும் குறைவான இந்த பயணத்தில் பிரதமருடன் வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன் மற்றும் பல மூத்த அதிகாரிகள் உட்பட ஒரு சிறிய தூதுக்குழு செல்வதாக அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“இரு நாடுகளின் நலன்களை உள்ளடக்கிய பல விஷயங்கள் உள்ளன. அவை பொருளாதார ஒத்துழைப்பு, வட்டார மற்றும் இருதரப்பு பாதுகாப்பு போன்ற முக்கியமான பிரச்சனைகள் மற்றும் கொவிட் -19 தொற்றுநோயை எதிர்ப்பதில் கூட்டு முயற்சிகள் உள்ளிட்ட முக்கியமான கலந்துரையாடல் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வு தேவைப்படுகிறது. இதனால், இரு நாடுகளின் தலைவர்களும் நேருக்கு நேர் சந்திப்பு நடத்த ஒப்புக் கொண்டுள்ளனர்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மலேசிய மற்றும் இந்தோனிசிய செம்பனை எண்ணெய் எதிரான பாகுபாடு, கொவிட் -19 தடுப்பூசி நடைமுறைகள் மற்றும் இந்தோனிசியா தலைநகரை இடமாற்றம் செய்வதால் மலேசிய வணிகங்களின் ஈடுபாடு உள்ளிட்ட வர்த்தக மற்றும் முதலீட்டு முயற்சிகள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடுவார்கள் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.