Home One Line P1 எஸ்பிஎம் தமிழ் மொழி – பகாங் மாணவர்களுக்கு ஓசை அறவாரியம் வழிகாட்டி நூல்களை வழங்கியது

எஸ்பிஎம் தமிழ் மொழி – பகாங் மாணவர்களுக்கு ஓசை அறவாரியம் வழிகாட்டி நூல்களை வழங்கியது

614
0
SHARE
Ad
சுந்தர் டான்ஸ்ரீ சுப்பிரமணியம்

கோலாலம்பூர் : பகாங் மாநிலத்தில்  எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஓசை அறவாரியம் தேர்வு வழிகாட்டி நூல்களை வழங்கியிருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு சமூக நல, கல்வித் திட்டங்களை மேற்கொண்டு வந்திருக்கும் ஓசை அறவாரியம் இந்த கொவிட்-19 நடமாட்டக் கட்டுப்பாட்டு காலக்கட்டத்தில் எஸ்பிஎம் தேர்வு எழுதும் இந்திய மாணவர்களுக்கு உதவும் வகையில்  இந்தத் திட்டத்தில் ஈடுபட்டிருக்கிறது.

பகாங் மாநிலத்தில், எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி நூல்களை ஓசை அற வாரியம் இலவசமாக அண்மையில் விநியோகித்தது.

#TamilSchoolmychoice

கடந்த ஆண்டு 2020-இல் நடைபெற வேண்டிய எஸ்பிஎம் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு எதிர்வரும் பிப்ரவரி மாதம் 22-ஆம் தேதியன்று தொடங்குகின்றன.

எஸ்பிஎம் தமிழ் மொழிக்கான தேர்வு மார்ச் 15-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்தத் திட்டம் குறித்து கருத்துரைத்த ஓசை அறவாரியத்தின் தலைவர் டத்தோ சுந்தர் டான்ஸ்ரீ சுப்பிரமணியம் “அண்மையில் ஏற்பட்ட வெள்ளங்களால் பகாங் மாநிலத்தில் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் கொவிட் 19 நடமாட்ட கட்டுப்பாடுகளால் மாணவர்கள் பள்ளி செல்ல முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டது. இதனால் எஸ்பிஎம் தேர்வுக்கு தயாராவதில் அவர்கள் பின்னடைவையும், சிரமங்களையும் எதிர்நோக்கினர். அதைக் கருத்தில் கொண்டுதான் இந்தத் திட்டத்திற்கு நாங்கள் பகாங் மாநில மாணவர்களைத் தேர்ந்தெடுத்தோம். அவர்களுக்கு உதவும் பொருட்டு எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி நூல்களை அவர்களுக்கு இலவசமாக வழங்கும் திட்டத்திற்கு நாங்கள் ஆதரவு தர முன்வந்தோம். இந்த நூல்கள் பகாங் மாநிலத்தில் எஸ்பிஎம் தமிழ் மொழியைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களிடம் அண்மையில் சேர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன” எனத் தெரிவித்தார்

பெரா – கேமரன் மலை – தெமர்லோ வட்டாரங்களில் எஸ்பிஎம் தேர்வு வழிகாட்டி நூல்கள் விநியோகம்

எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வுக்காக மாணவர்களை தயார் செய்வதிலும் அவர்களுக்கு கற்பிப்பதிலும் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த விக்னேஸ்வரி சாம்பசிவம் எழுதிய இந்த நூலை வி ஷைன் கிரியேஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

5 மாதிரி கேள்வி தாள்களோடு எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வில் மாணவர்களுக்கு உதவக் கூடிய பல்வேறு குறிப்புகளையும் இந்த நூல் கொண்டிருக்கிறது

“தமிழ் மொழியை ஒரு பாடமாக எஸ்பிஎம் தேர்வில் எடுக்கும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும் அவர்கள் தமிழ் மொழி பாடத்தில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற உதவ வேண்டும் என்ற எண்ணத்தோடும் நாங்கள் இந்த நூல்களை பகாங் மாநில மாணவர்களுக்கு வழங்க முன் வந்தோம். எங்களின் இந்த சிறிய பணியின் மூலம் பகாங் மாநில இந்திய மாணவர்கள் தமிழ் மொழி தேர்வில் சிறந்த தேர்ச்சி பெறுவார்கள் என்றும் எதிர்காலத்தில் மேலும் அதிகமான மாணவர்கள் தமிழை ஒரு பாடமாக தங்களின் எஸ்பிஎம் தேர்வில் எடுக்க முன்வருவார்கள் என்றும் கருதுகிறோம்” என்றும் சுந்தர் சுப்பிரமணியம் இந்த திட்டம் குறித்து மேலும் தெரிவித்தார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவால் இந்த நூல்கள் பகாங் மாநிலத்தில் எஸ்பிஎம் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அவர்களின் ஆசிரியர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நூல் கிடைக்காதவர்கள், இதன் தொடர்பில் தகவல் அறிய விரும்புபவர்கள் கீழ்க்காணும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்:

012-3922497