சிங்கப்பூர் : சிங்கை பிரதமர் லீ சியன் லூங்கின் துணைவியார் ஹோ சிங் துமாசிக் ஹோல்டிங்க்ஸ் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து விலகுகிறார். இந்த அறிவிப்பை துமாசிக் ஹோல்டிங்க்ஸ் இன்று செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 9) வெளியிட்டது எதிர்வரும் அக்டோபர் 1ஆம் தேதி அவர் தனது பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வார்.
அவருக்கு பதிலாக தில்ஹான் பிள்ளை என்ற இந்தியர் அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்படுகிறார். அவர் தற்போது துமாசிக் ஹோல்டிங்க்சின் அனைத்துலக பிரிவின் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
துமாசிக் ஹோல்டிங்ஸ் என்பது சிங்கப்பூர் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ முதலீட்டு கழகம் ஆகும்.
ஒரு வழக்கறிஞரான ஹோ சிங் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டது முதல் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. நாட்டின் பிரதமராக இருக்கும் ஒருவரின் துணைவியார் அந்நாட்டு முதலீட்டுக் கழகத்தின் தலைமைச் செயலாளராக செயல்படுவது முறையற்றது என பலரும் அடிக்கடி கூறிவந்தனர்.
இந்த அறிவிப்பை வெளியிட்ட துமாசிக் ஹோல்டிங்க்ஸ் தலைவர் லிம் பூன் ஹெங் நிர்வாக மாற்றம் என்பது எங்கள் வாரியத்தின் பொறுப்பில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் நடைமுறையாகும் எனத் தெரிவித்தார்.
சுமார் இருபது ஆண்டு காலமாக ஹோ சிங், துமாசிக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். அவரது பதவிக் காலத்தில் உலகின் மிகப் பெரிய முதலீட்டு கழகங்களில் ஒன்றாகவும் – மதிப்புமிக்க – நம்பிக்கைக்குரிய முதலீட்டாளராகவும் துமாசிக் வளர்ச்சியடைந்தது.