Home One Line P1 அவசர கால சட்ட ஆலோசனைக் குழு நியமனம் – 19 பேரில் ஒரே ஒரு இந்தியர்!

அவசர கால சட்ட ஆலோசனைக் குழு நியமனம் – 19 பேரில் ஒரே ஒரு இந்தியர்!

449
0
SHARE
Ad
டான்ஸ்ரீ ஆர்.பாலன்

புத்ரா ஜெயா : அண்மையில் பிரதமர் மொகிதின் யாசின் அவசர கால சட்டத்தை அறிவித்தபோது, அந்த அவசர கால சட்டம் அமுலில் இருக்கும் காலத்தில் எவ்வாறு நிர்வாக நடைமுறைகளை மேற்கொள்வது, எப்போது அந்த சட்டத்தை இரத்து செய்வது என்பது போன்ற அம்சங்களை ஆலோசனைக் குழு ஒன்று கண்காணிக்கும் என்று கூறியிருந்தார்.

அந்த ஆலோசனைக் குழு என்னவானது என ஜசெகவின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கும் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதைத் தொடர்ந்து இன்று அந்த ஆலோசனைக் குழுவின் கட்டமைப்பு அறிவிக்கப்பட்டது. எப்போது அவசர காலத்தை முடிவுக்குக் கொண்டு வரலாம் என மாமன்னருக்கு இந்தக் குழு ஆலோசனை வழங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

எனினும், குழுவுக்கான செயல் நடைமுறைகள் குறித்த விளக்கங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

19 உறுப்பினர்களைக் கொண்ட அந்தக் குழுவுக்கு, முன்னாள் தலைமை நீதிபதி அரிபின் சக்காரியா அந்தக் குழுவுக்குத் தலைமையேற்கிறார்.

பலதரப்பட்ட தொழில் துறை நிபுணர்கள் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

முன்னாள் அரசாங்கத் தலைமைச் செயலாளர் சம்சுடின் ஓஸ்மான், முன்னாள் காவல் துறைத் தலைவர் நோரியான் மாய், முன்னாள் ஆயுதப் படைகளின் தலைவர் சுல்கிப்ளி சைனால் அபிடின், இருதய நோய் நிபுணர் டாக்டர் யாஹ்யா அவாங், தேசிய வணிக அமைப்புகளுக்கான தலைவர் தெர் லியோங் யாப் ஆகியோர் குழுவில் இடம் பெறுபவர்களில் சிலராவர்.

சைபர்ஜெயா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் டான்ஸ்ரீ ஆர்.பாலன் இந்தக் குழுவில் இடம் பெற்றிருக்கும் ஒரே இந்தியராவார்.

சுகாதார நிபுணர்கள், வழக்கறிஞர்கள், பெர்லிஸ் முப்டி (இஸ்லாமியத் துறை மதபோதகர்) முகமட் அஸ்ரி சைனுல் அபிடின் ஆகியோரும் இடம் பெற்றிருக்கின்றனர்.

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்தக் குழுவில் இடம் பெற்றிருக்கின்றனர்.

அம்னோவின் சார்பில் தஞ்சோங் காராங் நாடாளுமன்ற உறுப்பினர் நோ ஓமார், பிகேஆர் சார்பில் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், ஜசெக சார்பில் அந்தோணி லோக், அமானா சார்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அகமட் ஆகியோருடன் பெர்சாத்து சபா, சரவாக் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்தக் குழுவில் இடம் பெற்றிருக்கின்றனர்.