கோலாலம்பூர்: 2018-இல் மே மாதம் நம்பிக்கை கூட்டணி பொறுப்பேற்ற பின்னர் நிதி அமைச்சகத்திற்கு மொகிதின் யாசினின் கவனம் இருந்ததாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.
முன்னாள் பினாங்கு முதல்வராக இருந்த அனுபவம் மற்றும் மாநிலத்தின் கடன்களைத் தீர்ப்பதில் லிம் குவாங் எங்கின் திறன் காரணமாக அவரை நிதி அமைச்சராக தேர்வு செய்ய முடிவு செய்ததாக மகாதீர் கூறினார்.
“முகமட் சாபு தற்காப்பு அமைச்சராகவும், மொகிதின் யாசின் உள்துறை அமைச்சராகவும், வான் அசிசா துணை பிரதமராகவும் நியமிக்கப்பட்டனர். நாங்கள் அவருக்கு (லிம்) மூத்த பதவியை வழங்க வேண்டியிருந்தது. அவர் பினாங்கு அரசாங்கத்தை நன்றாக நிர்வகித்தார் என்பதையும் உணர்ந்தேன். மொகிதின் நிதி அமைச்சராக இருக்க விரும்பினாலும், லிம் அந்த துறையில் திறமையானவர் என்பதால் நாங்கள் அவரைத் தேர்ந்தெடுத்தோம், ” என்று சினார் ஹாரியான் பேட்டியில் அவர் கூறினார்.
ஒரு சீனரை நிதியமைச்சராக நியமித்ததற்காக தனக்கு கிடைத்த விமர்சனங்கள் குறித்து கருத்து தெரிவித்த மகாதீர், இந்த பதவியை தகுதியின் அடிப்படையில் வழங்கப்படுவதாக வலியுறுத்தினார. மேலும் நஜிப் ரசாக் அரசாங்கத்தில் இருந்த காலத்தில் நிதியமைச்சராகவும் இருந்தார் என்பதை சுட்டிக் காட்டினார்.
“அவர் மலாய்க்காரர். அவர் என்ன செய்தார் என்று பாருங்கள்,” என்று அவர் கூறினார்.