கோலாலம்பூர்: தனது மனைவியின் சூரிய சக்தி திட்டம் சம்பந்தமான ஊழல் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருக்கும் நிலையில், நாளை நீதிமன்றத்தில் இருப்பதற்கு நஜிப்பிற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி கொலின் லாரன்ஸ் செக்குவேராவிடம் நஜிப்பின் வழக்கு காலை 10 மணியளவில் மட்டுமே தொடங்க அனுமதி வழங்குமாறு தலைமை வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லா விண்ணப்பித்தார்.
சரவாக் கிராமப்புறத்தில் உள்ள 369 பள்ளிகளுக்கான சூரிய சக்தித் திட்டம் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டில் ரோஸ்மா குற்றவாளியா அல்லது விடுவிக்கப்படவாரா என்பதை நாளை நீதிபதி முகமட் சைய்னி மஸ்லான் முடிவு செய்வார்.
69 வயதான ரோஸ்மா, 187.5 மில்லியன் ரிங்கிட் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டையும், ஜெபாக் ஹோல்டிங்ஸின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சைடி அபாங் சாம்சுடினிடமிருந்து 6.5 மில்லியன் ரிங்கிட் இலஞ்சம் வாங்கிய இரண்டு குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்கிறார்.