Home கருத்தாய்வு தேர்தல் களம் நேரடிப் பார்வை: பெர்சே தேர்தல் அறிக்கை விவாதம் – அஞ்சாமல் முன்வந்த அன்வார்...

தேர்தல் களம் நேரடிப் பார்வை: பெர்சே தேர்தல் அறிக்கை விவாதம் – அஞ்சாமல் முன்வந்த அன்வார் – நழுவிக்கொண்ட நஜிப்

667
0
SHARE
Ad

IMG_4071

ஏப்ரல் 18 – வெற்றியோ? அல்லது தோல்வியோ? போர் களத்தில் பகைவர்களை நேருக்குநேர் சந்திக்கும் ஆற்றலும், துணிவும் உள்ளவனே உண்மையான படைத்தலைவன் என்று கூறுகிறது பண்டைய கால போர் மரபு.

இன்றைய அரசியல் சூழ்நிலைக்கும் பொருந்துவதாக அமைந்துள்ள இந்த கூற்றை, நேற்று பெர்சே இயக்கம் நடத்திய இருகட்சிகளுக்கும் பொதுவான தேர்தல் அறிக்கை பற்றிய பொதுவிவாதத்தில் கலந்து கொண்டு, தான் ஒரு சிறந்த தலைவன் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்.

#TamilSchoolmychoice

முறையான அழைப்பு விடுத்திருந்தும்,எதிர்பார்த்தது போல் இவ்விவாதத்தில் கலந்து கொள்ளாமல் தவிர்த்த நஜிப் துன் ரசாக், வந்திருந்தவர்களை பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியதோடு, தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கை பற்றிய நம்பிக்கையை, பொதுமக்களின் மனதில் விதைக்கும் ஒரு அருமையான சந்தர்ப்பத்தையும் தவற விட்டார்.

நஜிப் ஆதரவாளர்கள் ஏமாற்றம்IMG_4134

கிட்டத்தட்ட 3000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டிருந்த அந்த சீன அரங்கத்தில், சரியான நேரத்திற்கு தனது பாதுகாப்புப் படையினருடன் வந்திறங்கினார் அன்வார் இப்ராகிம்.

வழக்கமான தனது புன்னகையுடன் உற்சாகமாக அரங்கிற்குள் நுழைந்த அவர், கூட்டத்தினர் அனைவரையும் பார்த்து கை அசைத்தவாறு தனது இருக்கையை நோக்கிச் சென்றார்.

அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்று, கரகோஷங்களை எழுப்பி அன்வாருக்கு சிறப்பான வரவேற்பளித்தனர்.

கடைசி நிமிடம் வரை நஜிப் வருவாரா? மாட்டாரா ? என்று அரங்கத்தின் வாசலையே பார்த்துக் கொண்டிருந்த சில தேசிய முன்னணி ஆதரவாளர்கள், நஜிப் வரவில்லை என்பது உறுதியானவுடன் ஏமாற்றத்தோடு, பெருமூச்சொன்றை விடுத்து அரங்கை விட்டு வெளியேறினர்.

இருப்பினும் அந்த அரங்கம் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் ஊடகங்களைச் சேர்ந்தவர்களால் நிரம்பி வழிந்தது.

அதற்கு மேல் அந்த அரங்கத்தில் இடமில்லாததால், பலர் அரங்கத்திற்கு வெளியே முன்னேற்பாடாக அமைக்கப்பட்டிருந்த திரையில், அன்வாரின் பேச்சைக் கண்டுகளித்தனர். இது தவிர, நிறைய பேர் சாலையோரத்தில் உள்ள கடைகளில் அமர்ந்து ஆர்வமுடன் இந்நிகழ்வை கவனித்தனர்.

விவாத மேடையில் நஜிப் மற்றும் அன்வார் அமர்வதற்குத் தகுந்தாற் போல் முறையாக நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அதேபோல் நஜிப் மற்றும் அன்வார் தங்களது தேர்தல் அறிக்கையை கையில் வைத்திருப்பது போல் உள்ள படம் பொறித்த பதாகை மேடையை அலங்கரித்திருந்தது.

ஆரவாரங்களுடன் தொடங்கிய அன்வாரின் பேச்சுIMG_4120

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பக்காத்தானின் தேர்தல் அறிக்கை பற்றிய சிறப்பம்சங்கள் அனைத்தையும் எடுத்துரைத்த அன்வார், அவ்விவாதத்திற்கு நடுவராக செயல்பட்ட டாக்டர் பரூக் மூசாவின் கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளித்தார்.

அன்வார் பேச்சுக்கு இடையே, தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டின் போது நஜிப் பேசிய காணொளி திரையிடப்பட்டது.

தங்களது கட்சிக் கொள்கைகளில் உறுதியாக இருப்பது, இந்தியர், சீனர், மலாய்காரர்கள் என்று பாராமல் அனைவரையும் சமமாக வைத்துப் பேசுவது –போன்ற அன்வாருக்கே உரிய தனித்தன்மை முழக்கங்கள்  இக்கூட்டத்திலும் இடம்பெற்றன.

அன்வாரின் பேச்சுக்கு அனைத்துத் தரப்பிலிருந்தும் பலமான கைதட்டல்கள் எழுந்தன.இறுதியாக வேறொரு கூட்டத்தில் பேசவிருப்பதால் இத்துடன் நான் விடைபெறுகிறேன் என்று தனது உரையை முடித்துவிட்டு கிளம்பிய அன்வாரை, பெர்சே தலைவர் அம்பிகா சீனிவாசன் மற்றும் தேசிய இலக்கியவாதியும் பெர்சே இணைத் தலைவருமானயான சமாட் உட்பட அனைவரும் வாசல் வரை வழியனுப்பி விட்டு வந்தனர்.

மேலும் பல ஆதரவாளர்கள் அன்வார் வாகனத்தில் ஏறும் வரை அவருக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.அன்வாருக்குப் பிறகு மேடையேறிய  பிகேஆர் கட்சியின் வியூக இயக்குனரான ரபீஸி ரம்லி, பக்காத்தானின் தேர்தல் அறிக்கை பற்றி விளக்கமளித்தார்.

நஜிப் வர இயலாவிட்டாலும், தனது பங்குக்கு தேசிய முன்னணியைச் சேர்ந்த முக்கிய பிரதிநிதிகளையாவது விவாதத்திற்கு அனுப்பியிருக்கலாம் என்று கூட்டத்தில் சிலர் ஆங்காங்கே கிசுகிசுத்துக் கொண்டது நமது காதுகளில் விழத்தான் செய்தது.

முன்பு கூறியது போல் பண்டைக் கால அரசியல் பாணியில் நேருக்கு நேர் மோதாமல் நழுவுகின்ற பாணியைப் பின்பற்றும் தேசிய முன்னணி மீது  படித்த மக்கள் தொடர்ந்து இனியும் நம்பிக்கை வைப்பார்களா?

கடைசிவரை நஜிப்புக்காக மேடையில் போடப்பட்டிருந்த நாற்காலிகள் வெறிச்சோடிக்கிடந்தது எதைக் காட்டுகிறது?

தேசிய முன்னணி தங்களது தேர்தல் அறிக்கையில் பக்காத்தானைப் பின்பற்றியது உண்மை தான் என்பதை உணர்த்துகிறதா?

அல்லது பொதுத்தேர்தலுக்குப் பிறகான தேசிய முன்னணியின் நிலை இது தான் என்று சொல்லாமல் சொல்லிக் காட்டுகின்றதா? பொறுத்திருந்து பார்ப்போம்.

தங்களுக்கு கிடைத்த ஒரு அருமையான சந்தர்ப்பத்தனை தேசிய முன்னணி நழுவ விட்டு விட்டது என்றுதான் கூற வேண்டும்.

– பீனிக்ஸ்தாசன்